Skip to main content

130 வருடப் பழமையைச் சிதைத்த பகை.. உருக்குலைக்கப்பட்ட கோயில்!

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

The 130 temple demolished

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ளது 130 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில். இந்த கோவிலை ஒட்டி நால்வர் மடாலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் ஆண்டாண்டு காலமாக பராமரித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களின் பெரும் பங்களிப்புடன், இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சுப காரியங்கள் நடந்து வந்துள்ளன. குறிப்பாக, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் கல்யாணம், காதுகுத்து திருவிழா, சைவ சித்தாந்த வகுப்புகள், பெரிய புராணக் கதைகள், இலவச யோகா பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த யோசித்தால், இந்த கோவிலையே தேர்ந்தெடுப்பர். அந்த அளவுக்கு இந்த விநாயகர் கோவில் அப்பகுதி மக்களின் அடையாளமாக திகழ்ந்து வந்துள்ளது.

 

முன்னோர்களான பழனியப்பன், தர்மலிங்கம், அலமேலு அம்மாள், அங்கண்ணன், முருகேசன் ஆகியோரின் வழித் தோன்றல்களால் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இதை விரும்பாத மகாலிங்கபுரத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர், இந்த புகழ்பெற்ற விநாயகர் கோவிலை அபகரிக்கும் பொருட்டு காய் நகர்த்தி வந்துள்ளார். இதையடுத்து சஞ்சீவ்குமார், இது தனது தாத்தா சொத்து என உரிமை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில், ஜூன் 20 அன்று நள்ளிரவில் சஞ்சீவ்குமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குண்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் திருட்டுத்தனமாக விநாயகர் ஆலயத்திற்குள் நுழைந்துள்ளார். இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாமல் இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி அங்கிருந்த குண்டர்கள் விறுவென ஜேசிபி இயந்திரம் கொண்டு கோவிலின் சுற்றுச்சுவர் மற்றும் மணிமண்டபத்தை இடித்துள்ளனர். 

 

விடிந்ததும் கோவிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவத்திற்கு காரணமான சஞ்சீவ் மற்றும் அடியாட்கள் நாற்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். 

 

மக்களின் கோவில் என அறியப்பட்ட 130 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Postponement of the program of alternative parties joining the BJP

பா.ஜ.க.வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணையும் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26.02.2024) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி இன்று மாலை நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இருப்பினும் நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பா.ஜ.க.வினர் யாரும் வரவில்லை. அதன் பின்னர் மாலை 06.40 மணியளவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர்.

அதன் பின்னர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில், “இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பா.ஜ.க.வில் இனைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் கட்சியில் இணைபவர்கள் மோடியை சந்திக்க வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதாலும், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

Next Story

ஆட்டோ ஓட்டுநரும் போலீஸும் மாறி மாறி தாக்குதல்; கோவையில் பரபரப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
auto driver and the police took turns beating

கோவை மாவட்டத்தில் உள்ள பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்துக் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, வாகனம் ஓட்டுபவர்களிடம் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருக்கிறதா எனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அந்தப் பகுதியில் வந்த ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் செய்யப்பட்டது. 

அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவை சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அந்த ஆட்டோவையும் நிறுத்தியுள்ளனர். வழக்கம் போல டிராபிக் போலீசாரை கண்டதும் தனது டிரைவிங் லைசன்ஸ், ஆட்டோவின் ஆர்சி புக் என அனைத்தையும் எடுத்துக் காண்பித்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர். ஆனால், அவரின் பேச்சு மது அருந்தியது போல இருந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் கீழே இறங்காமல் ஆட்டோ டிரைவர், அதான் எல்லாம் சரியா இருக்குல்ல அப்றம் ஏன் கீழ இறங்குன்றீங்க எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிராபிக் போலீஸ், முதலில் நீ கீழ இறங்கு... என அழுத்தமாகக் கூறியுள்ளனர். அப்போது கீழே இறங்கிய ஆட்டோ ஓட்டுநர், சார் நான் ஒரு முக்கியமான வேலையா போறேன் சார்... என்ன விடுங்க எனக் கூறியிருக்கிறார். இதனால் மேலும் கடுப்பான போலீசார், முக்கியமான வேலைக்கு போற நீ எதுக்காக குடித்துவிட்டு வண்டி ஓட்ற? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநரோ, ஏங்க நான் சரக்கெல்லாம் அடிக்கவில்லை எனப் பதில் கூறியிருக்கிறார். ஆனால் அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து போலீசார், அவரை ஒருமையில் திட்டியுள்ளார். 

உடனே சட்டென்று கோபப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், தன்னிடம் சோதனையில் ஈடுபட்ட டிராபிக் போலீசை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமாகியுள்ளது. அப்போது ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக்கொண்டதால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. இதனைக் கண்டதும் மேலும் சில டிராபிக் போலீசாரும் அங்கு வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநரை நீ குடிச்சிருக்கிறது எல்லாருக்குமே தெரியுது. அதனால் அமைதியா இரு எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் அமைதியாகாத ஆட்டோக்காரர், தன்னை அந்தக் காவலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், அது ரொம்ப தவறான வார்த்தை எனவும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு மற்ற போக்குவரத்து காவலர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, சம்பந்தபட்ட டிராபிக் போலீஸ் ஓடி வந்து அந்த ஆட்டோ ஓட்டுநரை தனது காலால் உதைத்துள்ளார். இவ்வாறு உதைக்கும்போது, காவலரின் காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தன்னை உதைத்த போக்குவரத்து காவலர் மீது ஆட்டோ ஓட்டுநரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளார். உடனே அருகில் இருந்த டிராபிக் போலீசார், அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து, போலீஸ் மேலேயே கை வைப்பியா? என சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அந்த ஆட்டோ ஓட்டுநரை ஒரு வழியாக காவல் நிலையம் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆட்டோ ஓட்டுநரும் டிராபிக் போலீசும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் போலீசாரின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், அங்கு நின்ற சில இளைஞர்கள் டிராபிக் போலீசை மீட்டு அவரின் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இது அனைத்தையும் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.