Skip to main content

சார் பதிவாளர் வீட்டில் புதைக்கப்பட்ட பணம்; லட்சக்கணக்கில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்