Skip to main content

28ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள்!!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

12th grade students get together after 28 years

 

சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-93 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் பாடப் பிரிவில் 22 மாணவர்கள் கல்வி பயின்றனர்.  இதில் 6 பேர் மாணவிகள்.  இவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பு  அதனைத்தொடர்ந்து வேலை என அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாகப் பிரிந்தனர். இதனைதொடர்ந்து  28 ஆண்டுகள் கடந்த நிலையில் சிதம்பரம் மாலைக்கட்டி தெருவில் உள்ள தனியார் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை அனைவரும் ஒன்றிணைந்தனர்.  அப்போது கல்வி பயின்ற அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பள்ளிக்காலத்தில் நடைபெற்ற பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.

 

இதில் அவர்களின் பிள்ளைகள் கலந்து கொண்டு பெற்றோர்கள் பள்ளி காலத்தில் நடந்த நினைவுகளைப் பேசும் போது கைதட்டி மகிழ்ந்தனர். இதுகுறித்து மாணவர்களில் ஒருவரான அண்ணாமலைப்பல்கலைக்கழக கண்காணிப்பு அலுவலரான வெங்கடேசன் கூறுகையில், “நாங்கள் அனைவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தொடர்பே இல்லாமல் இருந்து வந்தோம். எங்களுடன் பள்ளியில் கல்வி பயின்ற பன்னீர்செல்வம் என்பவர் தற்போது சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அலுவலராக உள்ள அவரும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ராஜ்குமார், கவிதா வினோதினி ஆகியோரும் அப்போது கல்வி பயின்ற அனைத்து மாணவர்களையும் சமூக வலைதளம் மூலம் ஒருங்கிணைத்தனர்.

 

பின்னர் அனைவரும் ஒரு இடத்தில் நேரடியாகச் சந்திப்பது என முடிவு செய்து ஒன்றிணைந்துள்ளோம். எங்களுடன் கல்வி பயின்ற மாணவர்கள் தற்போது பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் நல்லநிலையில் உள்ளனர். எங்களுக்கு கல்வி பயிற்றுவித்த தமிழ் ஆசிரியர் குப்புசாமி, ஆங்கிலம் ராதாகிருஷ்ணன், வணிகவியல் நடராஜன்  ஆகிய ஆசிரியர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவப்படுத்தினோம். எங்களின் 28 ஆண்டுகள் கழித்து பள்ளிக்கால நினைவுகளையும் நாங்கள் ஆசிரியரிடத்தில் நடந்துகொண்டது குறித்து பேசினோம். இது எங்களுக்கு மனமகிழ்ச்சியை அளித்தது. மேலும் கல்விபயின்ற பள்ளிக்கு எங்களால் ஆன உதவிகளை செய்வதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்