Skip to main content

10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா?

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

Is 10.5 per cent reservation will stop

 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கென 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சட்டத்திற்கு கவர்னர் பன்வாரிலாலின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

 

இந்த நிலையில், மஹாராஷ்ட்ரா மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட ஒரு வழக்கில், இடஒதுக்கீடு வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால், தமிழக அரசு வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக திடீர் பரபரப்பு உருவாகியிருக்கிறது. 

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 2018இல் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தார். மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட வருடங்களாக இருந்த வந்தது.

 

இதனை ஏற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூக மக்களுக்காக 16 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி, மாநில சட்டசபையில் சட்டம் நிறைவேற்றினார் தேவேந்திர பட்னவிஸ். இதற்கு மாநில கவர்னரும் ஒப்புதல் அளித்தார். சட்டமும் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததுடன் கல்வியில் 13 சதவீதமும், வேலைவாய்ப்பில் 12 சதவீதமும் மட்டுமே மராத்தா மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலானது. இந்த வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்து வந்த அசோக்பூஷன், எல்.என். ராவ், அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திரபட் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நேற்று (5.5.2021) தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், “அரசியல் சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிராக தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவும் நிலையில்தான் 50 சதவீதத்துக்கு அதிகமான இடஒதுக்கீட்டை பரிசீலிக்கலாம். ஆனால், மராத்தா மக்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அசாதாரணமான சூழல் நிலவவில்லை. கல்வி மற்றும் பொருளாதார நிலையிலும் மராத்தா மக்கள் பின்தங்கியிருக்கவில்லை. அதனால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இந்தச் சட்டத்தால் பலனடைந்தோருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

இந்த தீர்ப்பு மஹாராஷ்ட்ராவில் அதிர்வுகளை ஏற்படுத்த, தமிழகத்திலும் இதுகுறித்த விவாதங்கள் எழத் துவங்கிவிட்டன. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வழங்கப்பட்ட வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கும் ஆபத்து சூழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 

10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் இந்த  சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்து, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது. இந்த சூழலில்தான், மராத்தா மக்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள தீர்ப்பு பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதுகுறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, “மராத்தா மக்களுக்கு அந்த மாநில அரசு வழங்கியது தனி இடஒதுக்கீடு! ஆனால், வன்னியர் மக்களுக்கு தமிழக அரசு வழங்கியிருப்பது உள் இடஒதுக்கீடு! மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று வகைப்படுத்திதான் வன்னியர் சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு. அதனால், மராத்தா மக்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு, 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது” என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் எம்.எல்.ஏ ஆகும் பொன்முடி?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Suspension of sentence in Ponmudi case

திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிறை தண்டனை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்பொழுது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

2023 டிசம்பர் 21ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி 21/12/2023 அன்று காலை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் அவரது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

Next Story

'26 நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'- எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Supreme Court

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்.15 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், 'அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19 கீழ் உட்பிரிவு 1 ஐ ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் வருமான வரி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை, எஸ்.பி.ஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும்' என கூறப்பட்டது.

மேலும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையப்பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்க்கட்சியினர் வரவேற்றுள்ளனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

Supreme Court

இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற அந்த வழக்கின் விசாரணையில் எஸ்.பி.ஐ வங்கிக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் வைத்துள்ளது. '24க்கும் குறைவான அரசியல் கட்சிகளே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு இடையிலான தொடர்புபற்றி எதுவுமே கேட்கவில்லை. ஆனால் மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட எஸ்பிஐ அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது' என கேள்வி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

'தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என கூறியதால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது' என எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 26 நாட்கள் ஆகிறது இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எஸ்பி வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்பிஐ வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்' என  தெரிவித்த நீதிமன்றம், நாளை மாலைக்குள் விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவும், மார்ச் 15 ஆம் தேதிக்குள்  எஸ்பிஐ  வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை பெற்று வெளியிட தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.