Skip to main content

100 ஏக்கர் நிலம் எதற்கு? அமைச்சர் சொல்ல முடியுமா? ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

கோபிச்செட்டிப்பாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டமாக்குவதற்கு நான் கோரிக்கை வைக்கிறேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டியளித்திருக்கிறார். இதிலிருந்து கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையே அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வைக்காமல் இருப்பது தெரிய வருகிறது. 


 

கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும். அந்தந்த மாவட்டத்தில் மூடப்பட்டு கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை காப்பாற்றி வேலை இழப்புகளையும் தவிர்க்க முடியும். கோபியை தனி மாவட்டமாக பிரித்தால் கோபியை சுற்றி இருக்கின்ற மக்கள் வளர்ச்சி பெறலாம் என்ற ஆர்வத்தோடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த பகுதி மக்களுடைய கோரிக்கையை தான் நான் தமிழக அரசுக்கு தெரிவித்தேன். 


 

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்து கொண்டிருக்கிறார்களே அங்கெல்லாம் 100 ஏக்கர் நிலம் பெற்றுக்கொண்டு தான் பிரித்தார்களா ?. இப்போது வேலூரை மூன்றாக பிரித்தார்களே அங்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 ஏக்கர் கொடுத்த மூன்று தர்ம பிரபுகள் யாரென்று அமைச்சர் சொல்ல முடியுமா ?. ஒரு மாவட்டம் பிரிப்பதற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு என்று எனக்கு புரியவில்லை. அதற்கான விளக்கத்தை அமைச்சரிடம் எதிர்பார்க்கிறேன். 
 

சேலம் - சென்னை  8 வழிச்சாலை திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் நிலம் கொடுக்கவில்லை என்று சொன்னால் திட்டத்தை கைவிட்டுவிடலாமே. எரிவாயு குழாய் பதிக்கின்ற திட்டத்திற்கும், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கின்ற திட்டத்திற்கும் நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளை காவல்துறையை வைத்து மிரட்டுவது ஏன் ?. நிலங்களை கையில் வைத்துக்கொண்டு அல்லவா அந்த திட்டங்களை அறிவித்திருக்க வேண்டும். கொங்கு மண்டல அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் கொங்கு மண்டல மக்கள் சார்பாக கேட்கிறேன் மற்ற மாவட்ட பிரதிநிதிகளை போல நம் பகுதியில் இருக்கின்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க முயற்சி எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Next Story

“முதல்வருக்கு நன்றி...” - கொ.ம.தே.க. அறிக்கை

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

eswaran MLA thanked Chief Minister Stalin

 

“சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய இன்றைய உண்மை நிலையையும், நிறுவனங்கள் படுகின்ற சிரமத்தையும் புரிந்துகொண்டு கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார் 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய ஒருநாள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அமைச்சர்களைப் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அமைச்சர்களும் தொழில் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலையை முதலமைச்சருக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கோரிக்கையாக அரசு பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு மின் நுகர்வோர் சங்கங்கள் காத்திருக்கிறார்கள். 

 

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மின்சார துறைக்கு அதைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பெயரில் இன்றைக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள கோரிக்கையையும் கனிவோடு பரிசீலித்து விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.