அரவக்குறிச்சி தேர்தலில் திமுக சார்பில் செந்தில்பாலாஜியும், அதிமுக சார்பில் செந்தில்நாதனும், அமமுக சார்பில் சாகுல்அமீதும் போட்டியிடுகிறார்கள். சாகுல்அமீது அரவக்குறச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டியில் 60,000 இஸ்லாம் வாக்காளர்களை குறிவைத்தே களத்தில் நிறுத்தியிருக்கிறார்கள்.

Advertisment

ttv dinakaran

ஒருபக்கம் செந்தில்பாலாஜியும், செந்தில்நாதனும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் களத்தில் சுற்றிவருகின்றனர் மறுபுறம் சாகுல் அமீதின் பிரச்சாரம் வேகம் களத்தில் கொஞ்சம் சோர்வாகத்தான் உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட செயலாளர்கள், சீனிவாசன், மனோகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோரை களத்தில் இறக்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

Advertisment

அதேசமயம் அமமுக தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல் அமீதுக்கு ஆதரவு கேட்டு, சேந்தமங்கலம் மேல்பாகம், நவமரத்துப்பட்டி, குரும்பப்பட்டி, கோவிலூர், அண்ணாநகர், பள்ளப்பட்டி ஷாநகர், பள்ளிவாசல், ஈசநத்தம், அரவக்குறிச்சி காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“தற்போதைய தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்பு நம்முடன் இருந்தார். அப்போது பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய ஆற்றல்மிகு தலைவர் டி.டி.வி. தினகரன் தான் என கூறினார். இப்போது வேறு இடத்தில் இருக்கிறார்.

Advertisment

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு என்னை சிறைக்கு அனுப்ப முடியுமே தவிர, வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. சாதி, மதமற்ற அரசியலில் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். ஜெயலலிதாவின் வீரத்தை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். சிங்கத்தின் தலையாக இருப்போமே தவிர, யாருக்கும் வாலாக இருக்க மாட்டோம்.

செந்தில்பாலாஜி எந்த வகையில் ஈர்ப்பு ஏற்பட்டு தி.மு.க.வில் சேர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். காரணம் மீண்டும் அமைச்சராக வேண்டும் என்கிற பதவிவெறி தான். அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் டெபாசிட் கூட கிடைக்காது என்கிற அச்சத்தில்தான் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அரசு, 3 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் வகையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற செந்தில்நாதன் தான் தற்போதும் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நீண்ட நாளைக்கு பிறகு தொகுதி பக்கம் தலை காட்டியுள்ளார்.

ஆனால், அ.ம.மு.க.வின் வேட்பாளர் சாகுல் அமீது அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர். தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை நன்கு அறிந்தவர். எனவே, இந்த முறை பரிசு பெட்டகத்துக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவது, குடிநீர் பிரச்சனையை தீர்க்க சிறப்பு திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பேசினார்.