Skip to main content

"மற்றொரு பிரிவினைக்கு நாங்கள் தயாராக இல்லை" - யோகி ஆதித்யநாத் பேச்சால் பரபரப்பு

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

yogi adityanath karnataka election reservation related speech

 

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்திருந்தது. மேலும்  அவர்களை 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலாக  அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. மேலும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கும் கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது.

 

இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு 2 பழங்குடியின சமூகத்தினருக்கு தலா 2% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகத்தினர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள் ஒதுக்கீடு தொடர்பாக, ஏ.ஜே.சதாசிவ குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மாநில அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் செய்த பஞ்சாரா சமூகத்தினர், இட ஒதுக்கீட்டிற்காக பல நாட்களாக போராடி வருவதாகவும் எங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அப்போது கூறி இருந்தனர். அதனைத் தொடர்ந்து எடியூரப்பாவின் வீட்டின் மீது பறந்த பாஜக கொடியை அகற்றி எரிந்த போராட்டக்காரர்கள் பஞ்சாரா சமூகத்தின் கொடியை ஏற்றினர்.

 

மேலும் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய சூழலும் அப்போது ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரது உருவப்படங்களை எரித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம், இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் இந்த வழக்கானது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “மே 9 ஆம் தேதி வரை கர்நாடக அரசின் இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக்கூடாது. மேலும் மே 9-ம் தேதி வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் நேற்று (26.04.2023) உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாகன பிரச்சாரம் மேற்கொண்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், "மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இட ஒதுக்கீட்டு  விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியதாகும் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளதால் உத்திர பிரதேசத்தில் இரட்டை இயந்திர அரசாகச் செயல்படுவதன் காரணமாகக் கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் ஏற்படவில்லை.

 

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காகவே மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்குக் காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருகிறது. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. அதே நேரம் பிஎப்ஐ அமைப்புக்கு நாடு முழுவதும் தடை விதித்து பாஜக எடுத்த நடவடிக்கை இஸ்லாமிய அமைப்பின் செயல்பாட்டைப் பலவீனமாக்கி உள்ளது. மேலும்  இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு மத அடிப்படையில் பிரிவினைக்கு உள்ளானது. இதனால், மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்க முடியாது. அத்துடன் மற்றொரு பிரிவினைக்கு நாங்கள் தயாராக இல்லை" என்று பேசினார். தற்போது இவரின் இந்த பேச்சானது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
New information about the Bengaluru incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல  வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.