Women cannot even travel by train EPS Criticism

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (06.02.2025) மதியம் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்துள்ளார். பெண்கள் பெட்டியில் பயணித்து கொண்டிருந்த அவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு திடீரென கே.வி. குப்பம் அருகே ஓடும் ரயிலில் ரயிலில் இருந்து அப்பெண்ணை அந்த இளைஞர் கீழே தள்ளிவிட்டுள்ளார்

கர்ப்பிணிப் பெண் கழிவறைக்குச் சென்ற பொழுது அங்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், இதனால் கூச்சலிட்டதால் அந்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணைக் கீழே தள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கே.வி. குப்பம் காவல்துறையினர், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அடுக்கம்பாளையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அப்பெண்ணை அனுமதித்துள்ளனர். கை மற்றும் கால் உள்ளிட்ட இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இது தொடர்பான முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பெண்ணின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பெண் பயணிகள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் மக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஹேமராஜ் ஏற்கனவே செல்போன் பறித்த வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைதானவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவை - திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

Women cannot even travel by train EPS Criticism

Advertisment

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.