Skip to main content

“அம்மா மறைந்த இந்நன்னாள் என ஈபிஎஸ் சொன்னது இதற்குத்தான்” - ராஜன் செல்லப்பா விளக்கம்

Published on 07/12/2022 | Edited on 08/12/2022

 

"This is why EPS said that mother passed away today," explained former minister Rajan Chellappa

 

அம்மா மறைந்த இந்நன்னாளில் என்று கூறிய வார்த்தைகளை ஈபிஎஸ் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை என மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்தபோது இது குறித்துப் பேசிய அவர், “ஓபிஎஸ் கூட்டப்போவது பொதுக்குழு அல்ல கண்காட்சிதான். இன்னும் அவரால் மாவட்டச் செயலாளர்களை வைத்து நிரூபிக்க முடியவில்லை. ஒரே ஒரு பேச்சாளர்தான் இருந்தார். அவரும் போய்விட்டார். அவர் கூட திமுகவிற்கு போய்விட்டார். ஓபிஎஸ் திமுகவுடன் வைத்திருந்த உறவை கோவை செல்வராஜ் சென்று உறுதிப்படுத்திவிட்டார்.

 

ஓபிஎஸ் தனியாக கட்சி நடத்தினால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதிமுக என்பது எடப்பாடி தலைமையில் ஒரே இயக்கம்தான். இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெறும். தலைமை கழகத்தையும் நாங்கள்தான் வைத்துள்ளோம். வெற்றி பெறுவதற்கும் தயாராக உள்ளோம்.

 

அம்மா மறைந்த நன்னாளில் என ஈபிஎஸ் சொன்னதற்கு சிலர் கூறிய கருத்துகளைப் பார்த்தேன். அனைத்து கூட்டங்களிலும் உறுதிமொழி எடுப்பது வழக்கம். பழனிசாமிக்கு சில தலைவர்கள் போல் பார்த்துப் படிக்கும் பழக்கம் இல்லை. அவர் குறைந்த குறிப்புகளை வைத்து தான் பேசுவார். அன்று உறுதிமொழி பத்திரத்தில் சில தவறுகள் நடந்ததால் அந்த சூழல் ஏற்பட்டது. 

 

ஆளுமைத் திறன் கொண்டவர் நல்ல நாளில் மறைந்துள்ளார் என நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் 5ம் தேதி பிரதோஷம். பிரதோஷத்தைக் கூட நன்னாள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். அந்த நோக்கத்தோடுதான் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். பிரதோஷ நாள் மட்டுமல்ல டெல்லியில் இருக்கும் மத்திய அரசு எங்களை அங்கீகரித்து டெல்லிக்கு அழைத்ததைக் கூட எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கலாம். தவறான எண்ணத்துடன் அந்த வார்த்தைகளைப் படிக்கவில்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.