Skip to main content

"நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது" - மு.க.ஸ்டாலின் 

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

"We have a lot of responsibility and duty" - MK Stalin


தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நேற்று (06.04.2021) காலை 7 மணிக்கு துவங்கி மாலை 7 மணிக்கு முடிவடைந்தது. வாக்காளர்கள் பெருமளவில் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. தமிழகம் முழுக்க 72.78% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே மாதம் 2ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

 

தற்போது இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தின் தன்மை உணர்ந்து மிகுந்த பொறுப்புடனும் - ஒருங்கிணைப்புடனும் அயராமல் களப்பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

 

அதிமுக - பாஜக அரசுகளின் அதிகார துஷ்பிரயோகம் - அடக்குமுறை - ஒருசில காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கை ஆகியவற்றைச் சமாளித்து - கரோனா தொற்றுக்கிடையில் கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் ஆற்றிய பணிகள் பாராட்டுதலுக்குரியவை. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் திருவிழாவில் பேரார்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கும் - இப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறையினர் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் - பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

‘ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் வாக்குச்சாவடிகளில் உதயசூரியனுக்கு அளித்த வாக்கு தாமரை சின்னத்துக்கு விழுந்தது’, ‘மதுரவாயல் வாக்குச்சாவடி அருகில் பொதுமக்களைப் பார்த்து ஜாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் மிரட்டல்’, ‘தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள்’, ‘வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது’, ‘ஒட்டன்சத்திரம் மற்றும் மானாமதுரை தொகுதிகளில் அத்துமீறல்கள்’ உள்ளிட்ட பல்வேறு கடுமையான புகார்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வந்தாலும் - இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அராஜகத்தையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, இந்தத் தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பது, ஜனநாயகத்தில் நம் கூட்டணிக் கட்சியினர் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பொருத்தப்பாடாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு ஒரு சிறு இடைஞ்சலும் ஏற்பட்டுவிடாதபடி - அமைதியான தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆற்றிய தேர்தல் பணிகள் மெச்சத்தக்கவை.

 

வாக்குப்பதிவு நிறைவடைந்து - தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் - நான் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்தது போல், இனிதான் நமக்கு மிக முக்கியத் தேர்தல் பணி இருக்கிறது. இரட்டிப்புப் பொறுப்பும் நம் தலைக்கு மேல் இருக்கிறது. ஆகவே, திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2-ஆம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்த மையங்களில் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், அங்கு பணியிலிருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி அந்த மையங்களுக்குள் நுழைகிறார்களா என்பது பற்றி எல்லாம் தொடர்ச்சியாகக் கண்காணித்திட வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் ‘டர்ன் டியூட்டி’ அடிப்படையில் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து கொண்டு, கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக, தொய்வின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிட வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மின்னணு வாக்குப்பதிவு மையங்களில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்தால் உடனடியாக கட்சித் தலைமைக்குத் தெரிவித்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
CM MK Stalin campaigned in Thadangam village of Dharmapuri 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி தடங்கம் கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்து விடாமல் தடுக்க ஜனநாயக சத்திகளும் நாட்டு மக்களும் களம் கண்டுள்ள போர் இது. நாம் நடத்தும் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கான கட்டியம் கூறும் தேர்தல் இது. பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழிப்பதை தடுக்க தான் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது நடக்க இருப்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.. சமூக நீதி, சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. சமூக நீதியை பாதுகாக்க வேண்டும், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சமூக நீதி பேசும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. மக்களுக்கும் பா.ம.க.வினருக்கும் அதற்கான காரணம் நன்றாகவே தெரியும். பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததை அக்கட்சியினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக தி.மு.க. போராடியது. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு” எனப் பேசினார். 

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.