Skip to main content

'வலியுறுத்தி எந்தப் பயனும் இல்லை; நமக்கு நாமே பாதுகாப்பு' - எடப்பாடி கண்டனம்

Published on 09/07/2024 | Edited on 17/07/2024
 We are our own security'-edappadi condemnation

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்தும் தமிழக அரசின் சட்ட ஒழுங்கு குறித்தும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை எனச் சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார். அதற்கான பதிவில்,

'கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:

புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப்படுகொலை.

தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.

தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

இனி இந்தத் திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்தப் பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்