Skip to main content

“பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை தடுக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள்” - துரைவைகோ

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Vote the matchbox to prevent privatization of public sector enterprises says Durai Vaiko

ரம்ஜான் பண்டிகையையொட்டி திருச்சியில் உள்ள சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் துரைவைகோ, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் அந்த பள்ளி வளாகத்துக்கு நேரில் சென்று இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, வேட்பாளர் துரைவைகோ பேசும்போது, எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் கருணையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வாழ பிரார்த்திக்கிறேன் என்று கூறிவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, திருச்சி துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மதியம் திருச்சி பெல் குடியிருப்பு வளாகத்தில் மாலையில் திருச்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் பனையக்குறிச்சி, குவளக்குடி பகுதிகளிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சென்று துரைவைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவில், தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பூரண கும்பமரியாதை கொடுத்தனர். பிரச்சாரத்தின் போது, அவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் குருக்கள் விபூதி, குங்குமம் பிரசாதமாக வழங்கினார். மேலும் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தாா். அவருக்கு தேவாலயத்தினர் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிரசாரத்தின் போது துரைவைகோ பேசும் போது கூறியதாவது:- ஒரு காலத்தில் திருச்சி பகுதி மக்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்த பெல் தொழிற்சாலை நலிவடைந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி பொதுத்துறை நிறுவனங்களின் நிலை இதுதான். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்க முயன்ற போது, வைகோ போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினார். இதனால் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களில் விளக்கு ஏற்றியவர் வைகோ. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால் பெல் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும். எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.

பிரச்சாரத்தில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ சேகரன், மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா மாவட்ட மதிமுக செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

சார்ந்த செய்திகள்