Skip to main content

‘சொந்தக் கண்ணே போதும்; இரவல் கண் வேண்டாம்!’ - திமுக சீனியர்கள் முணுமுணுப்பு!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

DMK seniors

 

“ரஜினியின் அரசியல் பிரவேசம்.. ‘சும்மா அதிருதுல்ல..’ ரகமா? பத்தோடு பதினொன்றா? என்ற கேள்விக்கு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விடை கிடைத்துவிடப் போகிறது. தி.மு.க அபிமான வாக்குகளோ, ஆட்சி மாற்றத்தை விரும்பும் நடுநிலையாளர்களின் வாக்குகளோ, சொற்பமாகவோ, கணிசமாகவோ ரஜினியிடம் போய்ச் சேர்வதை, எந்த 'ஐபேக்' மூளையாலும் தடுத்துவிட முடியாது. அதே நேரத்தில்,  ‘உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா..’ என்ற நிலைமை திமுகவுக்கு வந்துவிடக்கூடாது.” என்று நொந்துகொண்டார், விருதுநகர் மாவட்ட உடன்பிறப்பு ஒருவர். 
 

சமீபத்திய தி.மு.க நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு ஆளாவது ஏன்?


விருதுநகர் மாவட்டத் தொகுதி ஒன்றில் ‘சிட்டிங்’ திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவருக்கு, வரும் தேர்தலில் சீட் இல்லையாம். இத்தனைக்கும் அவர், அந்தத் தொகுதியில் இரண்டு தடவை எம்.எல்.ஏ ஆனவர். அதே தொகுதியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஒருவர், ‘சின்னவர் மனசுல இடம் பிடிச்சாச்சு. சீட் எனக்குத்தான்’ என்று உரக்கச் சொல்லிவர, அது அந்த எம்.எல்.ஏ காதுக்கும் போய்ச்சேர, ‘இனிமேல் நம் கட்சியில் சீனியருக்குக் காலம் இல்லை..’ என்று அவர் முணுமுணுத்து வருகிறார். விருதுநகர் மாவட்ட தி.மு.க சீனியர்கள் சிலர், வெளிப்படையாகவே புலம்புகின்றனர்.

 

DMK seniors

 

‘கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்றால், வேட்பாளர் தேர்வின்போது இளைஞரணிக்கு 40 சதவீதமாவது ஒதுக்க வேண்டும்..’ என்ற கோரிக்கை ‘சைலன்ட்’ ஆக வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். எதிர்பார்த்த சதவீதம் கிடைக்கவில்லை என்றாலும், இளைஞரணியிலிருந்தே கணிசமான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் கொடியை, தற்போது உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு இருந்துவருகிறது. அந்த விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் அப்படி ஒரு நினைப்பில்தான் கூவி வருகிறார்.

 

DMK seniors

 

1977-ல் இருந்து, அ.தி.மு.க மற்றும் தி.மு.க  எம்.எல்.ஏ.வாக, எட்டாவது முறை சட்டமன்றத்துக்குச் செல்லும் சீனியர் அரசியல்வாதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ஐந்து முறை தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றவர். விருதுநகரில் அவர் வசித்துவரும் நிலையில், அவரது பெயரையும் படத்தையும் மட்டும் தவிர்த்து, மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் போஸ்டர் ஒட்டுகின்றனர்; பேனர் வைக்கின்றனர்; சுவர் விளம்பரம் செய்கின்றனர். இதையெல்லாம் பார்த்துவரும்  ‘அண்ணாச்சி’ மனது என்ன பாடுபடும்? தமிழகம் முழுவதும் சீனியர்கள் பரிதவித்து வரும் நிலையில், திமுக மாவட்ட செயலாளர் ஒருவரும், திமுக எம்.எல்.ஏ. ஒருவரும், இங்கே உதாரணத்துக்காக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.  

 

சரி, அந்த விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், எம்.எல்.ஏ சீட் பெறுவதற்குத் தகுதியானவரா?

 

cnc

 

முன்பே இவர், ரூ.2 கோடியை அன்பளிப்பாகத் தந்துவிட்டு, இளைஞரணியில் மாவட்டப் பொறுப்புக்கு வந்தவராம். உதயநிதியே இவரை நேரடியாகத் தொடர்புகொள்வதும், இவர் சென்னை சென்று அவரைச் சந்திப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மற்றபடி, அந்த அமைப்பாளர் குறித்துச் சொல்வதென்றால், குப்பை சமாச்சாரங்களே கொட்டிக் கிடக்கின்றன. ஆட்டோ டிரைவராக ஒரு வீட்டில் அறிமுகமாகி, அந்தக் குடும்பத்தில் புயல் வீசச் செய்து, கோடிகளைச் சுருட்டி வழக்கில் சிக்கியதெல்லாம், உதயநிதிக்குத் தெரியாத – உள்ளூர்வாசிகள் மட்டுமே அறிந்த வில்லங்க விவகாரம். 

 

DMK seniors

 

திமுகவினர் குறிப்பிட்ட அந்த விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமாரிடமே பேசினோம். “கே.கே.எஸ்.எஸ்.ஆரின் அரசியல் அனுபவத்துக்கு முன்னால், என் வயதே நிற்காது. நான் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். அண்ணாச்சியோ, தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர். அதனால், வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு படத்தையும் பெயரையும் மட்டுமே விளம்பரங்களில் போடுகிறேன். கே.கே.எஸ்.எஸ்.ஆர் பெயரை இரண்டாவது இடத்தில் போடுவது நன்றாக இருக்காதே என்றுதான் போடுவதில்லை. 

 

கட்சி வளர்ச்சிக்கான எந்த ஒரு கருத்தையும் தலைவர் ஸ்டாலினிடம் சொல்வதற்குச் சற்று பயமாக இருக்கும். சின்னவரிடம் (உதயநிதி) அந்தப் பயம் இருக்காது. எதையும் சொல்ல முடியும். அவரும் இளைஞரணியினரிடம் சகஜமாக நடந்துகொள்கிறார்; நன்றாக வேலை வாங்குகிறார். இந்த கரோனா காலக்கட்டத்தில் தி.மு.க இளைஞரணிதானே, மக்களுக்கான சேவையினை முன்னின்று செய்தது. கட்சித் தலைமை எனக்கு வாய்ப்பளித்து, விருதுநகர் தொகுதியில் நிற்கவைத்தால், நிச்சயம் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்தக் குடும்ப வழக்கு, விவகாரமெல்லாம் 2017-லிலேயே அமுங்கிவிட்டது. எங்கள் கட்சியிலேயே சிலர், தேவையில்லாமல் அதை இந்த நேரத்தில் கிளப்பிவருகிறார்கள்.” என்று வேதனைப்பட்டார்.   

 

‘ஜூனியராக இருந்துதானே சீனியரானீர்கள்? இளைஞர்களுக்கு வழிவிடுவதுதானே சரியானது?’ என்று கேட்டோம், பொதுநலனில் அக்கறையுள்ள  தி.மு.க மூத்த உறுப்பினர் ஒருவரிடம்

 

“இது காலம் காலமாக இருந்துவரும் பிரச்சனை. நீதிக்கட்சி காலத்திலேயே, பெரியார் ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத ஆர்.கே.சண்முகம் செட்டியார்,  பி.டி.ராஜன் போன்ற தலைவர்கள் இருந்தனர். அண்ணா எடுத்த முயற்சிகளால்தான், நீதிக்கட்சிக்கு மாணவர்கள் ஆதரவு கிடைத்தது. அதன்பிறகு, பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரானார், அண்ணா. பிறகு, பெரியாருக்கும் அண்ணாவுக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தி.மு.க உருவானது. அண்ணா மறைவுக்குப் பிறகு, சீனியர் நாவலரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜூனியரான கலைஞர் முதலமைச்சரானார். கலைஞருடனான மோதல் போக்கினால், எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டார். 

 

 

DMK seniors

 

பின்னாளில், கலைஞர் மீது அபிமானம் உள்ள சீனியர்களில் பலரும், அவரது இடத்தில் மு.க.ஸ்டாலினை வைத்துப் பார்ப்பதற்கு மனம் இல்லாதவர்களாகவே இருந்தனர். அதனால்தான், இறக்கும் வரையிலும் தலைவர் பதவி கலைஞரிடமே இருந்தது. 'மிசா' கொடுமையை அனுபவித்த ஸ்டாலினையே முழுமனதோடு தலைவராக ஏற்றுக்கொள்ளாத சீனியர்கள் உண்டு. வரலாறு இப்படியிருக்கும்போது, திடீர் வரவான உதயநிதி எம்மாத்திரம்? ‘திராவிடத் திமிரே!’ என்று உதயநிதிக்கும் போஸ்டர் ஒட்டும் இன்றைய தி.மு.க இளைஞரணியினர் எந்த மூலைக்கு? 

 

DMK seniors

 

சரி, திமுகவை ஐபேக் நிறுவனம் வழிநடத்தும் விஷயத்துக்கு வருவோம். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால், இந்த பிரசாந்த் கிஷோருக்கெல்லாம் திமுகவில் ஒரு வேலையும் இருந்திருக்காது. ‘ஒன்றிணைவோம் வா’ போன்ற ஐடியாக்களையோ, இணையத்தை முடிந்த அளவுக்குப் பயன்படுத்த, ஐபேக் பின்பற்றச் சொல்லும் டெக்னிகல் சமாச்சாரங்களையோ, குறை சொல்லிவிட முடியாது. காலத்துக்கேற்ற மாற்றம்தான்! அதே நேரத்தில், வேட்பாளர் தேர்வு விஷயத்தில், முழுக்க முழுக்க பிரசாந்த் கிஷோரை தி.மு.க நம்பினால், நிச்சயமாகத் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதமில்லை.

 

71 ஆண்டுகளாக வலுவான கட்டமைப்புடன் செயல்படும் திமுகவில், ‘அது சரியில்லை; இது சரியில்லை; அந்த மாவட்டச் செயலாளர் அப்படி; இந்த ஒன்றியச் செயலாளர் இப்படி! இவர்களே சரியில்லாதபோது, இவர்கள் பரிந்துரைக்கும் வேட்பாளர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள்? வேட்பாளர் ஆவதற்குத் தகுதியுள்ள நல்ல வேட்பாளரை எங்களால்தான் அடையாளம் காட்டமுடியும்.’ எனக் கட்சியின் அடித்தளத்தை தகர்த்துச் சீரமைப்பது, ஐபேக்கால் நடந்துவிடக்கூடிய காரியமா?

 

DMK seniors

 

nkn

 

உங்களைக் காட்டிலும் இவர்களே புத்திசாலி. எது நல்லதென்று இவர்களுக்கே தெரியும்.’ என, வேட்பாளர் தேர்வில் ஐபேக் மூக்கை நுழைக்க அனுமதிப்பதை, ஏற்கனவே பழம்தின்று கொட்டை போட்ட கட்சி நிர்வாகிகளால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? பிறகெப்படி தேர்தலின்போது ஒத்துழைப்பார்கள்? தொகுதிதோறும், ஈடுபாட்டுடன் கட்சி கட்டமைப்பில் உள்ளவர்கள் தேர்தல் வேலை பார்க்கவில்லை என்றால், அந்த நேர சரிவைத் தடுப்பதற்கு முட்டுக்கொடுக்க வருமா ஐபேக்? கட்சி நிர்வாகிகளையோ, வேட்பாளர்களையோ, தன் சொந்தக் கண்ணால் அளவெடுத்து,  தலைமை ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதற்கெல்லாம்,  ஐபேக் என்ற இரவல் கண் தேவையில்லை. உணவுப் பொருளின் நிறத்தைப் பார்த்து இனிப்பா? காரமா? துவர்ப்பா? கசப்பா? என்று சொல்லிவிட முடியுமா? சொந்த நாக்கால் சுவைத்துப் பார்க்கவேண்டும். இதைவிட  வேறென்ன சொல்வது?” என்று சலித்துக்கொண்டார்.  

 

நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் இவ்விவகாரத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும் தி.மு.க!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது