Skip to main content

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என வலியுறுத்தப்போவதில்லை: ராமதாஸ்

Published on 15/10/2020 | Edited on 15/10/2020
vijay sethupathi 800

 

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும்.

 

விஜய் சேதுபதி தமிழ்த்திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். மிகவும் கடினமான காட்சிகளைக் கூட எளிதாக நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர். இப்படித் தான் நடிப்பேன் என்று வரையறை வகுத்துக் கொள்ளாமல் நடிப்புக்குத் தீனி போடும் அத்தனை பாத்திரங்களிலும் துணிந்து நடிப்பவர். அப்படிப்பட்டவர் 800 திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை; அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். ஒருவேளை முத்தையா முரளிதரனின் துரோகங்களையெல்லாம் நன்றாக அறிந்த பிறகே அவர் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார்.

 

ramadoss

 

முத்தையா முரளிதரனின் பூர்வீகம் தமிழ்நாடு தான். அவர் தமிழர் தான். ஆனால், அவர் தமிழ் குலத்திற்கே துரோகியானவர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர். இலங்கையில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் கண்டித்த போது, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று  ஏகடியம் பேசியவர். 2009&ஆம் ஆண்டு இலங்கைப் போரில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட போது,  தமிழர்களுக்கான விடுதலைப்போரில் பின்னடைவு ஏற்பட்டு விட்டதே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களை இழந்து விட்டோமே? என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கதறிக் கொண்டிருந்த போது, இலங்கையில் இனிமேல் தான் தமிழர்கள் அச்சமின்றி நடமாட முடியும் என்று நாக்கில் நஞ்சு தடவி பேசிய விஷம் தான் முரளிதரன். இலங்கையில் சிங்களர்களின் அட்டகாசத்தால் லட்சக்கணக்கான  ஈழத்தமிழர்கள் உயிருக்கு அஞ்சி தாய்மண்ணை விட்டு வெளியேறி உலகின் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் என்ற உண்மை வரலாற்றை மக்கள் பேசிய போது, ஈழத்தமிழர்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் வெளிநாடுகளுக்கு சென்றனர் என்று நக்கலடித்து மகிழ்ந்தவர் தான் முரளிதரன்.

 

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இராஜபக்சே குடும்பத்தின் புகழ்ந்து பேசுவது தான் அவரின் முழு நேரத் தொழில் ஆகும். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் ஆளுனராக முத்தையா முரளிதரனை நியமிக்கலாமா? என்று இராஜபக்சே சகோதரர்கள் பரிசீலிக்கும் அளவுக்கு அவர்களின் விசுவாசியாக இருந்தவர் முரளிதரன். ஈழத்தமிழர்களுக்கு முரளிதரன் செய்த துரோகங்களுக்கு இந்த உதாரணங்களே போதுமானவை. உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றவர்கள்; பன்னாட்டு போட்டிகளில் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியவர்கள். ஆனால், முரளிதரன் இனப்படுகொலை செய்தவர்களுக்கும்,  போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நிற்பவர். இந்த உண்மைகள் விஜய் சேதுபதிக்கு தெரியாமல்  இருக்கலாம்; அதனால் அவர் இந்தப்  படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

 

முத்தையா முரளிதரனின் விளையாட்டுச் சாதனையை சித்தரிக்கும் படத்தில் மட்டும் தான் நடிக்கிறேன்  என்று விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம். உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது; அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை  உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம்.


விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. நான் திரைப்படங்களை அதிக அளவில்  பார்ப்பவன் அல்ல. எனினும், நடிகர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற திரைப்படத்தை அப்படக்குழு அழைப்பை ஏற்று பார்த்தேன். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியை மக்கள் மருத்துவராகவே பார்த்தேன்; கிராமப்புற ஏழைகளுக்கு அவர் வாஞ்சையுடன் மருத்துவம் அளிக்கும் காட்சிகளில் நான் அவருக்குள் என்னைப் பார்த்தேன். ஆனால், முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரை மட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள்; மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள்.

 

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார்; மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார்'' என கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.