Skip to main content

“வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயல்” - திருமாவளவன் எம்.பி

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

vck protests against governor; Thirumavalavan announcement

 

இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுவதுமாகப் படிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

 

முதல்வர் தீர்மானத்தை வாசிக்கும்போதே கூட்டத்தின் பாதியில் ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ட்விட்டரில் #getoutravi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தமிழகம் என்றோ தமிழ்நாடு என்றோ ஆளுநர் அழைக்கட்டும். அது பிரச்சனை இல்லை. ஆனால், தமிழ்நாடு லச்சினையைப் புறக்கணித்தார் என்றால், ஆளுநர் வேண்டுமென்றே செயல்படுகிறார். இது வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கக் கூடிய ஒரு செயலாகத் தெரிகிறது. இதனை வன்மையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. 

 

தமிழ்நாடு அரசு ஏற்கனவே பின்பற்றக் கூடிய நெறிமுறைகளை ஆளுநர் புறக்கணிக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணிக்கிறார். திராவிட அரசியலை விமர்சிக்கிறார் என்றால் அவர் இங்கு ஆளுநராக இருப்பதற்குத் தகுதியற்றவர். அவரை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுகின்ற வரையில் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும். ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து போராடும்.

 

ஆளுநர் பிரச்சனையை முன்னிறுத்தி 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதை முடித்தவுடன் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் திட்டமிட்டபடி  வேங்கைவயைல் பிரச்சனைக்காக; அந்த அநாகரிகத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியது விசிக

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 vck gave Rs 10 lakh to the Chief Minister's relief fund

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அத்தோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளிற்கு இணங்க விசிக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளனர். அதன்படி ரூ.10 லட்சம் நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தற்போது வழங்கியுள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “புயல் பாதித்த பிறகு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்ற்றும் அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். ரூ. 4000 கோடிக்கான வடிகால் திட்டப் பணிகள் பாதி அளவு முடிந்திருக்கிறது என்ற புள்ளி விவரங்களை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த பணிகளை விரைவில் செய்வார்கள். அடுத்த மழைக்கெல்லாம் இந்த பாதிப்பு இருக்காது என்று நாம் நம்புவோம்” என்றார்.

Next Story

“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - விசிக சார்பில் குஷ்பு மீது புகார்

 

vck complaint against Khushbu

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதன்படி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மன்சூர் அலி கான். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு பதிவிட்ட பதிவு பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

 

எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், குஷ்பு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் கொடுத்துள்ள புகாரில், “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு எக்ஸ் தளத்தில் ‘சேரி மொழியில் பேச முடியாது’ எனப் பதிவிட்டது என்னையும் நான் சார்ந்திருக்கின்ற மக்களையும் 2000 ஆண்டுக் காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியையும் அவமானப்படுத்தியுள்ளது.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் மன வேதனைக்கும் நான் உள்ளாகியிருக்கிறேன். மேலும் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.