V.C.K. Pavalan's speech on the flag pole issue

மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு மார் 25 அடி உயரம் கொண்ட வி.சி.க. கொடியை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்றி வைத்தார். இந்த கொடிக்கம்பம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 45 அடி உயரமாக மாற்றப்பட்டது. உயர்த்தப்பட்ட கம்பத்தில் கடந்த 8ஆம் தேதி திருமாவளவன் எம்.பி. கொடி ஏற்ற திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த கொடிக் கம்பத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்திற்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது 45 அடி உயரமாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்திற்கு அனுமதி இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதனையடுத்து விசிக தொண்டர்கள் கடந்த 7ஆம் தேதி இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகைய பரபரப்பான சூழலில், 45 அடியாக உயர்த்தப்பட்ட விசிக கொடிக் கம்பத்தில் கொடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி கடந்த 8ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இந்த புதிய கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.

Advertisment

அதன் பின்பு முறையாகப் பணியை மேற்கொள்ளாமல் கொடிக்கம்பம் நடுவதை தடுக்கத்தவறிய காரணத்திற்காக சத்திரப்பட்டி வருவாய் அலுவலர் அனிதா, காவனூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து இன்று (11.12.2024) முதல் வருவாய்த்துறையினர் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வருவாய்த்துறை அலுவலர்கள் 3 பேர் மீதான பணியிட நீக்க உத்தரவைத் திரும்ப வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம் என பத்துக்கு மேற்பட்ட சங்கத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் தங்களது பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அனுமதியின்றி கொடிக் கம்பத்தின் உயரத்தை அதிகரித்து வைக்கக் கூடாது என வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள்கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசிகவினரிடம்கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருவாய்த்துறை அலுவலகர்களான ராஜேஷ், பரமசிவம், பழனியாண்டி, ஆகியோர் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதில் கொடிக் கம்பத்தை அகற்றச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு அலுவலர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது அனுமதியின்றி கொடிமரம் நட்டது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் விசிகவைச் சேர்ந்த21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள்கட்சி செய்தி தொடர்பாளர் பாவலன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு கிராமத்திற்குள் பட்டிலின மக்கள் வாழும் தெருவில்வி.சி.க. கொடி பறக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளிலோ, போக்குவரத்துக்கு இடையூராகவோ, முக்கிய பகுதிகளிலோ, அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதிகளில் அந்த கொடி பறக்கவில்லை. ஆனால் அனைத்து கட்சி கொடிகளும் நான் முன்பு சொன்ன பகுதிகளில் பறந்து கொண்டிருக்கிறது. திருமாவளவன் ஏற்றி வைத்த அந்த கொடிக்கு அனுமதி கொடுத்த வி.ஏ.ஓ-வை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்ததைவி.சி.க.-வுக்கு எதிராக தி.மு.க தரும் சிக்னல் என்று சொல்லமுடியாது. மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து நான்காவது முறையாக இது போன்ற சிக்கலை உருவாக்கி இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் யாருடைய அழுத்தத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. கிராம நிர்வாக அதிகாரியை இந்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்திருப்பது தவறானது” என்றார்.