Skip to main content

உடுமலை சங்கர் கொலை வழக்கு... தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்... மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
 k balakrishnan cpim

 

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்க முடியாத சாதிவெறி சக்திகள் சங்கரை கொலைசெய்தனர். 2016 மார்ச் 13 அன்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கர் கொடூரமான முறையில் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற கௌசல்யாவையும் கொலையாளிகள் வெட்டி வீழ்த்தினார்கள். மிகத்தீவிரமான சிகிச்சைக்கு பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார். தமிழகம் மட்டுமல்ல,  உலகமே அதிர்ச்சி அடைந்த மிகக் கொடூரமான சாதி ஆணவப்படுகொலை சங்கர் படுகொலையாகும்.

இவ்வழக்கில்  2017 டிசம்பர் 6 அன்று திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கௌசல்யாவின் தகப்பனார் சின்னச்சாமி மற்றும் கூலிப்படையினர் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதன் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில்கீழ் கோர்ட்டில் 3 பேர் விடுவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மீதம் இருக்கிற ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள்தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை என்பது ஏற்கும் படியாக இருந்தாலும்கூட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த கொலை வழக்கில் கொலைக்கான பிரதானமாக காரணமே சாதிவெறிதான். கூலிப்படையினரை ஏவியது கௌசல்யா குடும்பத்தினர்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. காரணம் கூலி படையினருக்கும் சங்கருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த வழக்கிலிருந்து சின்னசாமி விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் மேலும் சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவதை ஊக்கப்படுத்திடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடு குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் அரசு தன்னுடைய பொறுப்பை  தட்டிக் கழிக்கக்கூடாது. இந்த தீர்ப்பின் மீது தமிழக அரசு உடனடியாக  மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story

“எடப்பாடிக்கு எட்டப்பன் வரலாறு தான் பொருந்தும்” - கே.பாலகிருஷ்ணன்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 history of Eddyappan is suitable for Edappadi palaniswami says K. Balakrishnan

புவனகிரி பேரூந்து நிலையம் அருகே இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்  பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி பானைச்சின்னத்திற்கு வாக்கு கேட்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புவனகிரி ஒன்றியச்செயலாளர் பி.ஜெ.ஸ்டாலின் வரவேற்றார்.

இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் குறைந்த வாக்கில் வெற்றி பெற்றார். இந்த முறை வெற்றி பெறமாட்டார் எனக் கூறிவருகின்றனர்.  எதிரணியில் இருக்கிற கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தபோது கூட உங்களால் திருமாவளவனை தோற்கடிக்க முடியவில்லை.   இன்றைக்கு  ஒண்ணா இருந்த கூட்டணி உங்களுக்குள்ளேயே உடைந்து போய் கிடக்கிறது. அதிமுகவை பல்வேறு கூறுகளாக உடைத்த பெருமை தமிழக வரலாற்றில் எடப்பாடி பழனிசாமிக்கு சேரும். அதேபோல இந்த தேர்தலிலே, தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்கிற கட்சியினுடைய முடிவுரையை எழுதுகிற காரியத்தையும் அதே எடப்பாடி பழனிசாமி தான் செய்து கொண்டிருக்கிறார்.

 history of Eddyappan is suitable for Edappadi palaniswami says K. Balakrishnan

எடப்பாடி பழனிசாமி மோடியிடம் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பேசுகிறார். 5 ஆண்டு  ஆட்சியில்  மோடி செய்யக்கூடிய எல்லா பாவத்துக்கும்  பக்க பலமா இருந்தது நீங்கதானே. அந்தக் கொலைகார கூட்டத்திற்கு காவடி தூக்குனது நீங்க தான். இதையெல்லாம் செய்துவிட்டு நான் ஒரு விவசாயி எனக் கூறுகிறீர்கள்.  வெள்ளையனை எதிர்த்து போராடி தூக்கு மேடைக்கு சென்ற கட்டபொம்மனுக்கு ஒரு வரலாறு இருக்கும் என்று சொன்னால், அதனை காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது.  உங்களுக்கு எட்டப்பன் வரலாறு தானே பொருந்தும். விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களுக்கு  ஆதரவு அளித்தீர்கள். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தை நியாயப்படுத்தி அப்போது பேசினீர்கள். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் இந்த 3 சட்டங்களையும் கிழித்து எறிய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அதே சட்டமன்றத்தில் தான் நீங்களும் இருந்தீர்கள். ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை. சட்டத்தை நிறைவேற்றியது மோடி கூட்டம் என்றால்,  ஆதரித்த துரோகி கூட்டம் அதிமுக என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழகத்தில் மோடி பாய் போட்டு படுத்தால் கூட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. சிதம்பரம் தொகுதியில் பாஜகவால் டெபாசிட் பெற முடியுமா? தமிழகத்தில் எந்த தொகுதியில் அவர்களால் டெபாசிட் பெற முடியும்?. முகவரியே இல்லாத கட்சியை வைத்துக் கொண்டு எப்படி ஜெயிக்க முடியும். நாட்டு மக்கள் கட்டிய வரிப்பணத்தை அம்பானிக்கும், அதானிக்கும் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளீர்கள். இது தமிழகத்தில்  4 முறை பட்ஜெட் போடலாம். ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் வாங்கிய கடனை  தள்ளுபடி செய்யவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என கூறினீர்கள். செய்தீர்களா? ரயில்வே துறையில் 30 லட்சம் வேலை காலியிடம் உள்ளது. அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும் விரோதமான மோடி ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது.

குடியுரிமைச் சட்டம் குடியைக் கெடுக்கும் சட்டம் என அதிமுக, பாமக உள்ளிட்ட 12  எம்பி களிடம் ஆதரவு அளிக்கவேண்டாம் என வாதாடினோம் போராடினோம், கேட்கவில்லை. ஆதரவளித்து சட்டத்தை நிறைவேற்றி கொலைக் கருவியை பாஜக கையில் கொடுத்துள்ளனர். சட்டத்தை நிறைவேற்றிய கொலைகார கூட்டம் பிஜேபி என்றால் அந்தக் கொலைகாரக் கூட்டத்திற்கு துணையாக இருந்த துரோகிகள் அதிமுக, பாமக கூட்டம். இதனை யாராவது மன்னிப்பார்களா? அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை அகற்றிவிட்டு  மனுநீதி சட்டத்தை  அமல்படுத்தப்  பார்க்கிறார்கள்.

சிதம்பரம் தொகுதியில் பாஜக அதிமுகவை டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். அதுதான் திருமாவளவனின் வெற்றி. பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஆலோசனை வழங்கக்கூடிய திருமாவளவனை இந்த தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.  

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் விஜய், ஆழ்வார், கீரப்பாளையம் ஒன்றியம் செல்லையா, நகர செயலாளர் மணவாளன், திமுக ஒன்றிய செயலாளர் மனோகர், மதியழகன், பேரூராட்சி தலைவர் கந்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் பாவணன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பூசி.இளங்கோவன், செயலாளர் சித்தார்த்தன், உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.