நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு திமுகவின் பிரச்சார யுக்தி முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி திமுக சார்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வண்ணம் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் அவருக்கு கட்சி பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

dmk

அதன் பின்னர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை ஜூலை 6ஆம் தேதி முதன்முறையாக தனது தலைமையில் நடத்தினார். அதன் பின்னர், தமிழகம் முழுதும் உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞரணியை வலுபடுத்தும் பணியில் ஈடுபடப் போகிறார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இளைஞரணியில் உள்ள சில நிர்வாகிகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் உதயநிதி தயாராகி விட்டார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணி பற்றி விசாரித்த போது, இளைஞர் அணியின் மாநில பொறுப்பில் இருப்பவர்கள் உதயநிதி ஸ்டாலினை விட வயதில் மூத்தவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே, உதயநிதி நியமனத்தின் போது ஜெயங்கொண்டம் சுபா சந்திரசேகருக்கு சட்டத் திருத்த தீர்மானக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

Advertisment

இளைஞர் அணியில் மூத்தவர்கள் இருக்கும் பட்சத்தில் உதயநிதியின் கீழ் செயல்பட வேண்டி இருக்கும். இது உதயநிதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கும் ஒரு நெருடலை ஏற்படுத்தக்கூடும் என்பதன் காரணமாக தான் சுபா சந்திரசேகர் வேறு பொறுப்பிற்கு மாற்றப்பட்டார் என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மாவட்ட பொறுப்புகளில் உள்ள சிலரை மாநில பொறுப்புக்கு கொண்டு வர உதயநிதி முயற்சி எடுத்து வருகிறார். அதற்கான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் இளைஞரணியில் விரைவில் நிறைய மாற்றங்களை உதயநிதி ஏற்படுத்த போகிறார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இளைஞரணியில் இருக்கும் சில சீனியர்களுக்கு வேறு பொறுப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.