Skip to main content

வெள்ள பாதிப்பு; “நிவாரண நிதியை உடனே தர மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்தினோம்” - டி.ஆர்.பாலு

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
T.R.balu says We urged Union Minister Amit Shah to provide relief funds immediately

சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்றது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது. அதே சமயம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான ரூ.37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரைத் தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஜனவரி 13 ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்தித்து பேசினர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய இந்த குழுவில் ஜெயக்குமார், வைகோ, சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், ரவிக்குமார், நவாஸ்கனி, சின்ராஜ் (கொ.ம.தே.க) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதையடுத்து, திமுக எம்.பி டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம். மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37,907 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க கோரினோம். ஏற்கெனவே, ஒன்றிய அமைச்சர்கள் வெள்ள சேதங்களை பார்வையிட்டு சென்றனர். ஜனவரி 15இல் டெல்லி திரும்பும் ஒன்றிய அரசின் குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அமித்ஷா கூறினார். மேலும் அவர், நிதி வழங்குவது குறித்து வரும் 27ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என அமித்ஷா உறுதி அளித்திருக்கிறார்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Tamil Nadu government case against central government

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tamil Nadu government case against central government

அப்போது அவர் பேசுகையில், “இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

Tamil Nadu government case against central government

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமனன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.