Skip to main content

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து... பின்னனியில் பா.ஜ.க... அம்பலபட்டுப்போன தேர்தல் ஆணையம்

Body

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், அரசியல்கட்சிகளின் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு ஒத்திவைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

    

ee

 


கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு அவசர, அவசரமாக ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது தேர்தல் ஆணையம். அதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இன்றுவரை நிவாரணம் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை. நிவாரணப் பணிகள் நடக்கிறது என்பதை அதிமுக அரசே ஒத்துக்கொள்கிறது. இந்த சூழலில் இடைத்தேர்தல் நடத்தினால் நிவாரணப் பணிகள் முடங்கும். அதனால் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பிறகு இடைத்தேர்தலை நடத்தலாம் என டி.ராஜா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இதுகுறித்தான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.

 

 
தேர்தல்அதிகாரிகளோ, வாக்குச் சாவடிகள் அமைப்பது, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவது, வேட்புமனு வாங்குவது என முதற்கட்ட பணிகளை முடித்திருந்தனர். திமுக, அமமுக, உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. திமுக வேட்பாளரான மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் கொரடாச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சிக் காரர்களோடு பேரணியாக சென்று மாலை அணிவித்துவிட்டு, பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார். அதேபோல் அமமுகவின் வேட்பாளரான மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜூம் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். நாம்தமிழர் கட்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் முழக்கம் சாகுல்ஹமீதும் நான்கு நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். ஆளும் அதிமுக தரப்பிலோ விருப்ப மனுக் கொடுத்திருப்பவர்களிடம் நேர் காணல் நடத்திவிட்டு, இன்று வேட்பாளர் அறிவிக்க இருக்கிறோம் என கூறியிருந்தனர்.

 

  
இதற்கிடையில் தலைமை தேர்தல் ஆணையரிடமிருந்து தமிழக தேர்தல் ஆணையர் சத்தியப் பிரதாசாகுவுக்கு உத்தரவு ஒன்றுவந்தது.  அந்த உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்தான கருத்தை அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படியே ஜனவரி 5-ஆம் தேதி பிற்பகல் அவசரமாக கட்சிகளின் பிரதிநிதிகளோடு ஆலோசித்தார் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்.

 


கருத்துக் கேட்பிற்கு திமுக சார்பில் முன்னாள் எம்,பி, ஏ.கே.எஸ்.விஜயன், அதிமுக சார்பில் மன்னார்குடி சாமிநாதன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முக்கால் மணி நேரம் நடந்த கருத்துக் கேட்பில்,“தேர்தலை உடனே நடத்துவதற்கு அவசரம் எதுவும் இல்லை. புயலால் பாதித்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு பிறகு தேர்தல் நடத்தலாம்”என்று பலரும்,  “இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தலாம்” என்று சிலரும், மற்ற தொகுதிகளுக்கு நடத்தாமல் புயலால் பாதித்துள்ள தொகுதியில் தேர்தல் நடத்துவது சரியல்ல, என்றும் கூறினர். இதை எழுத்து பூர்வமாகவே வாங்கிக் கொண்டார் ஆட்சியர். 

 

அந்த அறிக்கையை 5-ம் தேதி மாலையே அனுப்பிவைத்துவிட்டார். அதன்படியே திருவாரூர் தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம் என்கிறார்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள்.

 


இதற்கிடையில் திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் அக்கட்சி அழைக்கப்படவில்லை. கூட்டம் குறித்து தெரிந்துகொண்ட தினகரன், ‘கஜாபுயல் நிவாரணத்தைக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கூடாது’ என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பச் செய்திருந்தார். தேர்தல் ரத்துசெய்தது குறித்து தேசிய பொருப்பில் இருக்கும் பா.ஜ.க பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம், “ஜனவரி 5-ஆம் தேதி திருவாரூரில் அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்பு முடிந்து அறிக்கை கிடைத்ததுமே, அன்று மாலை பாஜக தலைவர் தமிழிசையையும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனது இல்லத்தில் சந்தித்தார்கள். முதலமைச்சர் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க திமுக உள்ளுக்குள் பயப்படுகிறது. என்பது அப்பட்டமாக தெரிகிறது. கஜாபுயல் நிவாரணம் முழுதாகத் தந்துவிட்டு தேர்தல் நடத்தலாம் என்பதுதான் எங்களின் நிலைபாடு, எங்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே இருக்கிறது. எனவே திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்” என்று சிரித்த படியேகூறினார். 

 


அப்போதே தேர்தல் ரத்தாகிவிடும் என தெரிந்துவிட்டது.  காரனம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்திலும் தேர்தல்நடக்க வாய்ப்பில்லை என்று அறிவித்தார் தமிழிசை அதேபோல இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது. தேர்தலை சந்திக்க திமுக பயப்படவில்லை, மாறாக அதிமுக தான் பயப்படுகிறது என்பது அனைவருக்குமே தெரியும், புயல் பாதித்த பகுதிகளில் எப்படி வாக்குகேட்பது என்கிற மன ஓட்டத்தில் திமுக தரப்பு கூறியதால், தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என கூறிவருகின்றனர். குருவி உட்கார பணம்பழம் விழுத்த கதைபோல் இருக்கு” என்கிறார்.

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எம்.பி.தம்பிதுரை, “கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணப் பணிகள் நடந்து வரும் வேலையில் இடைத்தேர்தல் நடத்துவது சரியில்லை” என்பதை தொடர்ந்து வலியுறுத்தியபடியே இருந்தார். அதே கருத்தை 6-ம் தேதி திருவாரூர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்தபோதும் கூறினார். 

 

அமைச்சர் ஜெயக்குமாரோ, திருவாரூர் இடைத்தேர்தலில் ஊருடன் ஒத்துபோக வேண்டும். தேர்தல் நடத்துவதை அங்குள்ள மக்களே விரும்பவில்லை. கஜா புயலால் வீடு, தோட்டம் முழுமையாக இழந்து தவிக்கிறார்கள் அவர்களிடம் வாக்கு சேகரிப்பது தவறானசெயல்” என்று கூறியுள்ளார்.

 


அதே நாளில் நாகையில் அதிமுக அமைச்சரான ஓ.எஸ்.மணியனோ,  “திருவாரூர் இடைத்தேர்தலில் சூட்சமம் உள்ளது என ஸ்டாலின் கூறியதன் உள்நோக்கம் இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம்தான். தேர்தல் அறிவித்ததும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொடை நடுங்குகிறது. திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு அதிமுகவுக்கு எந்தவித பயமும் கிடையாது, இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூலாக கூறியுள்ளார்.

 


இதைகேட்டு அதிமுகவினரே குழப்பத்திற்கு ஆளாகினர். இது குறித்து நாகை மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தம்பிதுரை கூறும் கருத்துதான் இன்றைய நிலமையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து, மக்களின் நிலமையை நன்கு உணர்ந்து கூறுகிறார். ஆனால், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து, சசிகலா குடும்பத்தினரின் கருத்து, அது மக்களுக்கானதாக இல்லை, சுயநலத்திற்கானதாக இருக்கிறது. கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வேதாரண்யம், கீழ்வேளூர் தாலுக்காக்கள் முதன்மையானது. புயலால் பெரும் அழிவை சந்தித்து வீதியில், விதியை நினைத்து நிர்கதியாக நின்ற சமயத்தில் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனக்கூறி மக்களின் கோபத்திற்கு ஆளாகியவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அதற்காக பல இடங்களிலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது, தன்னை எதிர்ப்பவர்களை தற்போதுவரை காவல்துறை மூலம் பழி தீர்த்து வருகிறார். இந்த நிலமையில் கஜா பாதித்த பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் எனக் கூறுவது அவரின் அதிகாரப் போக்கையே காட்டுகிறது. தினகரனின் கருத்தை வழிமொழிவதுபோல் கூறியிருப்பது அவருக்கும் சசிகலா குடும்பத்திற்கு மிகப்பெரிய நெருக்கம் இன்னும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது” என்கிறார் ஆதங்கமாக.

 

 
 இதற்கிடையில் வேட்பாளரை அறிவித்த நாளில் இருந்து, திமுகவையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தார் டி.டி.வி தினகரன். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசியவர், “திருவாரூர் இடைத்தேர்தலைகண்டு ஆளுங்கட்சி பயப்படுவது போல பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் பயப்படுகிறது” என்றும், “திமுக வேட்பாளரை அறிவித்துவிட்டு, தேர்தலுக்கு எதிராக டி.ராஜாவையும் கி.வீரமணியையும், திருமாவளவனையும் பேசவைத்து. இரட்டை வேடம் போடுகிறது. ஆள்பவர்களும் ஆண்டவர்களும்   இடைத்தேர்தலில் காணாமல் போவார்கள்” என்று செல்லும் இடமெல்லாம் திமுகவினரை கடுப்பேற்றும் படியே பேசிவருகிறார்.   

 

இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நான் பயந்துகொண்டிருப்பதாக தினகரன் கூறுகிறார். பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பதற்காக அவர் வேண்டுமானால் பயப்படலாம். நேர்த்திக்கடன் போன்று வாரம் தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்திப்பவரும் தினகரன். மீது ஏற்கனவே பெரா வழக்கு, சிபிஐ விசாரணை, அமலாக்கத்துறை வழக்கு, சின்னத்திற்காக லஞ்சம் கொடுத்த வழக்குன்னு பல வழக்கு நிலுவையில் இருக்கு. அதற்காக அவர் வேண்டுமானால் பயந்துகொண்டிருக்கலாம். அதிமுகவுடன் அவர்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது, அதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை வருமான வரித்துறையே வெளியிட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவரை ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ தினகரன் என்று யாரும் அழைக்கவில்லை. 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கின்றனர். அவர் திமுக பயந்துகொண்டிருக்கிறது என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

 தினகரனின் கருத்துக்கு பதில் அளித்த விசிக தலைவர் திருமாவளவனும் செய்தியாளர்களிடம் பேசும்போது,“திமுக தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு திமுக பலவீனமான கட்சியும் அல்ல. கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்கள் மீளாத நிலையில், அங்கு சென்று நாம் பிரச்சாரம் செய்வது நமக்கே ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்திருப்பது, ஆணையத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதையே உணர்த்துகிறது. இப்படிப்பட்ட அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாமல், ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேர்தலை சில வாரங்களுக்கு தள்ளிப்போடுவது நல்லது. அந்த அடிப்படையில்தான் திமுகவும் கருத்து தெரிவித்திருக்கிறது” என்றார்.

 

இதற்கிடையில் கஜா புயல் பாதிப்புகளை உணர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்திருக்கும் நிலையில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.காமராஜிடம் கேட்டோம், “தேர்தல் தள்ளிவைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் யாரும் வந்து தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறவில்லை. திருவாரூர் தொகுதியில் அமமுக அணி வெற்றி பெற்றுவிடும் என்கிற பயத்தின் காரணத்தால் ஆளும் கட்சியும், ஆண்டுள்ள கட்சியும் தேர்தலை ஒத்திவைக்க செய்துள்ளது. இது கண்டிக்கதக்கது” என்கிறார்.  

 

திமுக வேட்பாளர் கலைவாணன் கூறுகையில் “நாங்கள் தேர்தலைத் தள்ளிவைக்க முயற்சி செய்வதாக தினகரன் கூறுகிறார். அவ்வாறான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடவில்லை. தேர்தலைத் தள்ளிவையுங்கள் என்று யார் யாரோ சொல்லலாம். திருவாரூர் தலைவர் கலைஞர் பிறந்த மண்ணாக இருக்கும் நிலையில், அவர் இருமுறை வெற்றிபெற்றுள்ள நிலையில், அங்கு போட்டியிட நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.  இரண்டு அணிகளும் ஒன்றாக இருக்கும்போது, ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதுதானே கலைஞர் 68,366 வாக்குகள் அதிகமாக வாங்கினார். தற்போது தலைவர் இல்லை என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த சவாலும் கிடையாது. மக்களின் நிலமையை உணர்ந்து கூறுகிறோம்” என்றார்.

 

திருவாரூர் தொகுதி வாக்காளரும் சமூக ஆர்வளருமான ஜி.வரதராஜனிடம் தேர்தல் ரத்துக்குறித்து கேட்டோம்,   “தேர்தல் ரத்து செய்திருப்பதை மக்களாகிய நாங்கள் மனதார வரவேற்கிறோம், கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அதில் இருந்து இன்னும் மீளமுடியாத நிலமையில் இருக்கும் நேரத்தில், அரசு நிவாரணப் பணிகள் மிகவும் மெத்தனமாகவே இருந்துவந்தது. இந்த நிலமையில் தேர்தல் அறிவித்ததும் அதிகாரிகள் முழுவதும் நிவாரண, மீட்புப் பணிகளை கைவிட்டுவிட்டு தேர்தல் வேலைகளுக்கு போய்விட்டனர். அதோடு 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் நடத்த முன் வந்ததே அரசியல் தலையீடு, காழ்ப்புணர்ச்சி என்பது தெரிகிறது. இன்று தேர்தல் ஆணையத்தின் உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்துவிட்டது. ஆளும் கட்சியின் தலையீடு இருக்கு என்பது புரிந்துவிட்டது” என்கிறார்.

 

திருவாரூர் தொகுதியில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநில செயலாளருமான மாசிலாமணியிடம் கேட்டோம், “கஜா புயல் வரலாறு காணாத சேதத்தை உண்டாக்கியுள்ளது என்பது உலகத்திற்கே தெரிந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள சிலருக்கு தெரியவில்லை. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரனம் கிடைக்காமல் இன்றளவிலும் போராட்டம் தொடருகிறது. கிராமபுறத்தில் உள்ள மக்களில் பலரின் அரசாங்க ஆவணங்கள் தொலைந்துவிட்டன. அதனால் வாக்களிக்க முடியாத நிலையும் உருவாகும், அதோடு இங்குள்ள மக்களின் ஏழ்மையை சாதகமாக்கி வாக்குகளை விலைக்கு வாங்கும்போக்கும் நடக்கும். பல குளறுபடிகள் நடக்கும், இதனால் தேர்தல் ஒத்திவைத்திருப்பது வரவேற்கதக்கது” என்கிறார்.

 

திருவாரூரை சேர்ந்த வழக்கறிஞரும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான சிவராஜேந்திரனிடம் கேட்டோம், “கஜா புயலால் அதிகம் பாதித்தது குடிசைகளும், குடிசையில் வாழும் தொழிலாளர்களும்தான், அவர்கள் இழந்த குடிசைகளைக்கூட சரிசெய்ய முடியாத நிலமையில்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு தேர்தலில் ஆர்வமே இல்லை, தேர்தலில் அதிகம் வக்களிப்பவர்கள் கிராமபுறத்தினர்தான் அவர்களுக்கே ஆர்வம் இல்லாத நிலையில் தேர்தல் நடத்த முன்வந்ததே கண்டனத்திற்கு உரியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரனம் கிடைத்து நல்ல மனநிலைக்கு வந்த பிறகே தேர்தல் நடத்தவேண்டும்” என்கிறார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்