ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறைச்சென்று உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், இன்று (25-01-25) சென்னையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மொழிப்போரில் முதலில் உயிர்நீத்தவர் நடராசன் என்பதால், நடராசன் - தாளமுத்து என நினைவிடத்தில் பெயர் என மாற்ற வேண்டும். இந்திய தேசத்தில் தமிழ் மண்ணை, தனி ஒரு நிலப்பரப்பாக சமூகநீதி மண்ணாக பாதுகாத்த போராளிகள் தான் தாய் தமிழ் காத்த போராளிகள். அந்த முதல் மொழி போராட்டத்தில் தலைமை ஏற்று முன்னெடுத்து சென்றவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அவருக்கு எதிராக இங்கு அவதூறுகள் பரப்பப்படுகின்றன. விசிக அதை வன்மையாக கண்டிக்கிறது. தந்தை பெரியார் சனாதனத்தை எதிர்ப்பதில் புரட்சியாளர் அம்பேத்கரோடு கைக்கோர்த்து நின்றார்.
அம்பேத்கரையும், பெரியாரையும் எதிர் எதிர் துருவங்களில் இங்கு நிறுத்துவது வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இருவரும், சனாதன எதிர்ப்பில், பார்ப்பண பனியா ஆதிக்க எதிர்ப்பில் ஒரே புள்ளியில் இணைந்து நின்றவர்கள். அவர்களுக்கிடையே வேறுபாட்டை உருவாக்குவதற்கு, முரண்பாட்டை உருவாக்குவதற்கு சனாதன சூழ்ச்சி முயற்சிக்கிறது. அந்த சூழ்ச்சி இங்கு எடுபடாது என்பதை நான் அழுத்தமாக சொல்கிறேன். வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அங்குள்ள காவல்துறையினர் குற்றப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விசாரிக்கக்கூடாது, சிறப்பு விசாரணை தேவை என்று நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை நியமிக்கப்பட்டது.
ஏராளத்தாள 2 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்தி புகார் அளித்தவர்கள் மீதே பாதிக்கப்பட்ட மக்கள் மீதே இவர்கள் தான் அந்த குற்றத்தை செய்தார்கள் என வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்ட நீதிமன்றம், இந்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது விசிக வேண்டுகோள் விடுக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்துகிறோம். இன்றைக்கு வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் விசிகவும் இந்த போக்கை கண்டித்து கிராமத்திலேயே அமைதியான முறையில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை அச்சுறுத்தி காவல்துறையினர் விசிகவினர் உள்பட பலரையும் கைது செய்திருக்கிறார்கள். இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது.
திமுக அரசு, சமூக நீதி பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க இந்த அரசு துணையாக நிற்கும் என்று நம்புகிறோம். காவல்துறையின் இந்த போக்கை, குறிப்பாக சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கிற இந்த குற்றப் பத்திரிகையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது. இந்த விஷயத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களோடு போராடுவோம். வேங்கைவயல் விவகாரத்தில் வெளியான வீடியோ, புகைப்படம், ஆடியோ அனைத்தும் ஏற்கெனவே வெளியானது தான். இது எல்லாம் வாட்ஸ் அப்பில் பரவியது தான், இது ஒன்றும் புதிய தகவல் கிடையாது. சீமானுடைய போக்குகள் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவர் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார், செயல்படுகிறார் என்று விளங்கவில்லை. அவரை யார் இப்படி உசுப்பி விடுகிறார் என்றும் தெரியவில்லை. அவரது வாதம் குதர்க்கவாதமாக உள்ளது. அவருடைய போக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. மிகவும் ஆபத்தான அரசியலை பேசுகிறார். அது அவருக்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல, அவரை பின்பற்றுகின்ற தோழர்கள் இதை கவனமாக அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.