
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட திருபுவனை என்ற இடத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள நண்பரும், நடிகருமான விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி பதிப்பகத்தார் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
அப்போது அது தவறான யூகத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும், தற்போது கூட்டணியில் உள்ள அணியில் விசிக தொடர வேண்டும் என்பதற்காகவும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அதன் மூலம் விசிக கூட்டணியில் உள்ள அணி பலவீனப்பட்டால் அது பாஜகவிற்குச் சாதகமான அரசியல் சூழல் மாறிவிடுமோ என்பதை எல்லாம் யூகித்து அந்த விழாவை புறக்கணித்தேன். ‘அவர் வரவில்லை என்றாலும் அவருடைய மனது நம்முடன் இருக்கும்' என்று விஜய் கூட அப்போது கூறினார். நான் நினைத்திருந்தால் விஜய்யுடன் கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று சொல்லலாம். அந்த கூட்டணி கதவையும் மூடினேன்.
பாஜக தலைமையிலான அணியையும் மூடினேன். அதிமுக பல தொகுதிகளைத் தரத் தயாராக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் கூட்டணி அரசுக்கும், ஆட்சிக்கும் உடன்படத் தயாராக இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் துணை முதலமைச்சர் பதவியைக் கோரலாம் எனவும் சிலர் ஆசைகாட்டினார்கள். கூடுதலாக 3 அல்லது 4 அமைச்சர் பதவியையும் கோரலாம் என ஆசைகாட்டிய சிலர் உண்டு. ஆனால் நீங்கள் நினைக்கிற அரசியல்வாதி அல்ல திருமாவளவன் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளேன். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்திவிட முடியாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறேன்” எனப் பேசினார்.