தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டிவருகிறார். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று (23.09.2021) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புக்கான ஆணைகளை முதல்வர் வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ''அமைச்சர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது துறைகளில் பணிகளை செய்துவருகின்றனர். விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் மிகவும் மகத்தானது. கடந்த மே 7ஆம் தேதி நான் பதவியேற்கவில்லை, பொறுப்பேற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக சுமார் இரண்டு லட்சம் மின் இணைப்புகளைத்தான் கொடுத்திருந்தது. ஆனால் திமுக பொறுப்பேற்ற நான்கு மாதத்தில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்க உள்ளது. இதைவிட பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
நான் பிறந்தபோதுதான் காவிரி ஒப்பந்தமும் உருவானது என கலைஞர் அடிக்கடி சொல்வார். அந்தக் காவிரி பிரச்சனைக்காக முழுமுயற்சி எடுத்தவர்தான் கலைஞர். காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பாக வழக்கையும் போட்டார்கள். இப்படி பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் கலைஞர். நிலமற்ற விவசயிகளுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார்கள். அதன் அடிப்படையில் நிலமும் வழங்கப்பட்டது. 1,89,719 ஏக்கர் நிலத்தை 1,50,159 பேருக்கு வழங்கிய ஆட்சிதான் கலைஞரின் ஆட்சி. இதற்கும் மேலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்ததும் கலைஞர் ஆட்சிதான்'' என்றார்.