
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் கையில் கட்டியிருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய் என்று தொடர்ந்து விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாட்சுக்கான ரசீதைக் கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்த அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும்போது சொத்துவிவரம் முழுவதையும் வெளியிடுவேன் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்துப் பேசுகையில், “தொடர்ந்து அரசின் மீதும், பல்வேறு துறைகள் மீதும் அவதூறுகளைப் பரப்பி எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை சுமத்தி வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், கடந்த ஆண்டு மின்சாரத்திற்கான நிலக்கரி 143 டாலருக்கு டெண்டர் கோரப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது.
அதுவே ஒன்றிய அரசு 203 டாலர் விலையை நிர்ணயம் செய்து மின்சார வாரியங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார்கள். இந்த டாலர் தான் ரேட். இந்த விலைக்கு நாங்கள் சொல்லக்கூடிய நிறுவனங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கான உத்தரவுகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்கள். இதில் யார் குறைவான விலையில் கொள்முதல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு 133 டாலர் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்துள்ளோம்.
அண்ணாமலை தன் சொத்துப்பட்டியலை பேரணி போகும்போது வெளியிடுவேன் எனச் சொல்வது... ஏற்கனவே அரவக்குறிச்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவரின் சொத்துப்பட்டியலும் அதில் இருக்கும். மீண்டும் அதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன. என் கேள்வி ஒன்றுதான். வாங்கின கடிகாரத்திற்கு பில் இருக்கா? இல்லையா?
தேர்தலுக்கு முன்னாடி வாங்கி இருந்தால் பில்லை கணக்கில் காட்டி இருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் வாங்கி இருந்தால் பில்லை வெளியிட்டிருக்க வேண்டும். நான் தூய்மையான அரசியல்வாதி; நான் சொல்வதெல்லாம் சரியான கருத்துகள் என்றால், ஒரு நிமிடத்தில் பில்லை வெளியிட்டு விடலாமே” எனக் கூறினார்.