Skip to main content

“கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; தயாராக இருங்கள்” - உதயநிதி ஸ்டாலின்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

“There is hope that the request will be met; Be prepared” Udayanidhi Stalin

 

தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டும் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இது தன்னுடைய கனவுத் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக போட்டித் தேர்வுப் பிரிவு என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் போட்டித் தேர்வை எளிதாக அணுகும் வண்ணம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வுப் பிரிவினை அமைச்சர் உதயநிதி இன்று துவக்கி வைத்தார். 

 

சென்னை நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி, “பள்ளிக் கல்வி இடை நிற்றலை அறவே ஒழித்திட 1 முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தினை முதலமைச்சர் அறிவித்துள்ளார். நான் எந்த மாவட்டத்திற்கு ஆய்விற்கு சென்றாலும் அந்தந்த பகுதியிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை ஆய்வு செய்து வருகிறேன். அங்கு உணவு தரமாக குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்து எனது காலை சிற்றுண்டியினை அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு வருகிறேன். புதுமைப் பெண் திட்டமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் 250 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதுவே இது எவ்வளவு முக்கியமான திட்டம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

 

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். ஆண்டு தோறும் 10 லட்சம் இளைஞர்கள் வேலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் துவக்கப்பட்டபோது, இந்த திட்டம் துவக்கப்பட்ட இந்த நாள் ஒரு பொன் நாள் என முதலமைச்சர் சொன்னார். இன்று நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியை துவக்கி வைக்கும் நானும் இன்று அதையேதான் உணருகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, இரயில்வே போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், இதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மிகவும் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும். அண்மையில் பிரதமரை சந்தித்தபோது தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளேன். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். 

 

சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் உள்ளன. இதற்கு லட்சக்கணக்கில் செலவிட வேண்டிய நிலை உள்ளது. கிராமப்புற மாணவர்களால் கூடுதல் கட்டணம் செலுத்தி இத்தகைய பயிற்சிகளை பெற முடியாது. இதனால் அவர்களது வேலை வாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி நம் மாணவர்கள் கட்டணமின்றி பயிற்சிகளை பெற்று மத்திய அரசு பணியில் சேரவும் மத்திய அரசு கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பினை பெறவும் நான் முதல்வன் போட்டித் தேர்வு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு அண்ணனாக உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் துணை நிற்பேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்