Skip to main content

“உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...” - ஐடி ரெய்டு குறித்து தங்கமணி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Thangamani has commented it raid conducted at Minister Senthil Balaji house

 

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணம், சட்ட ஒழுங்கு பிரச்சனை என திமுக அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்கமணி, “இந்த அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான அதிருப்தி இருக்கிறது என்று இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தால் தெரியும். பொதுவாக நாங்கள் சொன்னால் எதிர்க்கட்சி என்று சொல்வார்கள். ஆனால் நிதியமைச்சராக இருந்த பிடிஆரே திமுக அரசு 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறது என்று சொன்னார். எடப்பாடி பழனிசாமியும் கூட அந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போதும் பதிலில்லை. டாஸ்மாக்கை பற்றி அவரது கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். அவர்களையும் திமுக அரசே கைது செய்திருக்கிறது.

 

முன்பு தமிழகத்தில் அனுமதியில்லாமல் எந்த பாரும் இயக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். ஆனால் சமீபத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் அனுமதியில்லாமல் இயங்கி வந்த பார்கள் மற்றும் டாஸ்மாக்கிற்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாண்டு காலமாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வந்த பார்கள் மற்றும் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க வேண்டும் என்று என்று வலியுறுத்தி வருகிறோம். வருமான வரிசோதனையின் போது அதிகாரிகள் திருடர்களைப் போல் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்தார்கள் என்று அமைச்சர் கூறினார். என்னுடைய வீட்டிலும், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிலும் கூடத்தான் வருமான வரித்துறை சோதனைக்கு வந்தபோது அதிகாரிகள் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்து சோதனை நடத்தினார்கள்.

 

அன்றைய தினம் அந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து செய்தியாக ஒளிபரப்பினார்கள். அதெல்லாம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர்கள் வீட்டில் நடந்தால் மட்டும்தான் வாய் திறக்கிறார்கள். அவர்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி என்ற அடிப்படையில் திமுக அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மடியில் கணம் இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். எதற்காகத் தொண்டர்களை வைத்து அதிகாரிகளை மிரட்ட வேண்டும். எங்களது ஆட்சியின் போதுதான் எங்கள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் முழு பாதுகாப்பு கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லை. அதிகாரிகளே காவல் நிலையத்தில் சென்று பாதுகாப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

 

கரூர் மாவட்டத்திற்கு ஸ்டாலின் முதல்வர் இல்லை. செந்தில் பாலாஜிதான் முதல்வர். அவர் சொல்வதைத்தான் காவல் கண்காணிப்பாளர், வருவாய் அதிகாரிகள் என அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் கேட்பார்கள். அந்த அளவிற்கு அமைச்சர் வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புயல் பாதிப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
TN Govt is a pioneer in dealing with the storm disaster says Minister Thangam Thennarasu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு எனப் பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தக்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. வெள்ள மீட்புப் பணிக்கு முதல்வரே நேரில் சென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கிறது. அமைச்சர்கள் தொடர்ந்து மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது அப்படி செய்யாமல் எந்த படமும் இன்றி உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது அதிமுக அரசு ரூ. 5000 வழங்கியது; திமுக அரசோ ரூ. 6000 வழங்குகிறது. நிவாரண தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

எண்ண எண்ண குறையாத பணம்; கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.350 கோடி - சிக்கிய காங். எம்.பி

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்த்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இது குறித்து உள்துறை அமைச்சர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய போது, “எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, எம்.பி., வீட்டில் இருந்து, இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்டுள்ளது ஆனால் ஒட்டுமொத்த இந்தியக் கூட்டணியும் இந்த ஊழலைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. காங்கிரஸின் இயல்பிலேயே ஊழல் இருப்பதால், ஜேடியு, ஆர்ஜேடி, திமுக, எஸ்பி என அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தங்கள் ஊழலின் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்” என்றார்.