Skip to main content

டாஸ்மாக் நேரத்தை குறைக்குமாறு அரசுக்கு த.மா.கா. கோரிக்கை...

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
ttt

 

"டாஸ்மாக் கடைகள் இரவு வரை இருப்பதால் குடிமகன்கள் நடமாட்டம் காலை முதல் இரவு வரை இருக்கிறது. குடிமகன்களின் கூட்டத்தை தடுக்க வேண்டும் ஆகவே நேரத்தை குறைக்க வேண்டும்" என கூறுகிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையிலிருந்து வெளியேறி சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் மக்களால்  புதிதாக கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் வருகிற 30-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கரோனாவை ஒழிக்க துணைநிற்கும் பொருட்டு  பல்வேறு மாவட்டங்களில்  வணிகர்கள் சங்கம் தாமாகவே முன்வந்து காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதேபோல பொதுமக்கள் நலன் கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதியளிக்க வேண்டும். இதனால் குடிமகன்கள்  மதியத்திற்கு மேல் வெளியில் நடமாடுவது தவிர்க்கப்பட்டு, நோய் கட்டுக்குள் வர வாய்ப்பாக அமையும். இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைந்து அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்” - த.மா.கா கோரிக்கை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
TMc demand Election rules should be relaxed

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த மாநிலங்களிலும், விரைவில் தேர்தல் முடியும் மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) தளர்த்த வேண்டும் என  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் சிறிய மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. முதல் கட்டத்துக்குப் பிறகு, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முழு முடிவும் வெளியாகும் வரை எம்.சி.சி. இருக்கும்.

எனவே, எம்சிசியை ரத்து செய்ய இன்னும் 3 முதல் 5 நாட்கள் ஆகும். அதுவரை ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சித் தலைவர்கள், பல்வேறு அரசு, மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்கவோ, பொதுமக்கள் குறைகளைக் கேட்கவோ முடியவில்லை. வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அரசு விழாக்கள், புதிய பணிகளுக்கான பூமி பூஜை, நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க விழா, புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் விநியோகம், பொதுமக்கள் மனுக்கள் பரிசீலனை, டெண்டர் அழைப்பு போன்றவை நடக்கவில்லை. தேர்தல் நிலுவையில் உள்ள மாநிலங்களில் MCC விதிகளை அமல்படுத்துவது நியாயமானது. ஆனால் தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்சிசியை அமல்படுத்துவது நியாயமானதல்ல. எம்.சி.சி தளர்வு மற்றும் தேர்தல் முடிந்த மாநிலங்களில் இயல்பான நிர்வாகம் ஆகியவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் செயல்முறையை பாதிக்காது, ஏனெனில் இங்கு திமுக  ஆட்சி வெளியிடும் அறிவிப்பு அண்டை மாநிலங்களின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

மாநிலத்தில் 45 நாட்கள் நிர்வாகம் தேக்கம் அடைந்திருப்பது மக்களை, குறிப்பாக அரசாங்க உதவியை நாடும் ஏழை மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும், மேலும் தேர்தல் ஆணையத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, ஏப்ரல் 19ம் தேதி இரவு 7 மணிக்கும் நள்ளிரவுக்கும் அறிவிக்கப்பட்ட இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் தேர்தல் ஆணையம் செய்த குழப்பம்  மற்றும் முறையான ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்தது, பணம் ரூ.50000 உச்சவரம்பு நிர்ணயம் செய்வது குறித்து இங்குள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  எனவே, மருத்துவமனை, கல்லூரி சேர்க்கை, திருமணம், சொத்துப் பதிவு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்றவற்றுக்கு பணத்தை எடுத்துச் செல்வதில் தேர்தல் விதிமுறைகள்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. எனவே  த.மா.கா  இளைஞர் அணி சார்பாக  தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.