தமிழக எம்.பி.கள் மீதும் உளவுத்துறையின் கண்காணிப்பு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி போது ராஜஸ்தான் மாஜி முதல்வரான வசுந்தரராஜே சிந்தியாவின் மகனான துஷ்யந்த்சிங், தற்போது எம்.பி.யாக இருக்கிறார். சமீபத்தில் பாடகி கனிகா கபூரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக் கொண்டுள்ளார். கனிகா கபூருக்கு கரோனாத் தொற்று பாசிட்டிவ் என்று வந்ததால், துஷ்யந்த் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். தொற்று உறுதி செய்யப்படாத சூழலில் அவர் நாடாளுமன்றக் கூட்டத்திலும், அங்குள்ள நிலைக்குழு கூட்டத்திலும் கலந்துக்கொண்டு வந்துள்ளார்.

மேலும் அந்தக் கூட்டங்களில் அவருக்கு அருகில் இருந்த எம்.பி.கள் பலரையும் மத்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தின்போது துஷ்யந்துடன் இருந்த தமிழக எம்.பி. ஒருவர் இன்னமும் பயம் விலகாமல் தான் உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, துஷ்யந்த் சிங்குக்கு தமிழக எம்.பி. ஒருவர் தன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவரும் மிரட்சியில் இருந்தார். இவர்களுக்கெல்லாம் பாதிப்பு உள்ளதா என்று ரகசியமாக உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறது மத்திய அரசு. அவர்களுக்குத் தொற்று இல்லை என்று தெரிந்ததும் டெல்லி, நிம்மதியடைந்துள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.