தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்ற இந்தி கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ளதற்கு எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறை சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கல்வித் தகுதியில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது M.Phil பட்டம் பெற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விளம்பரத்தின் புகைப்படத்தினை தனது ட்விட்டரில் பதிவிட்டு இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி. சு.வெங்கடேசனின் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.