
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. முதல்வர் பதவியில் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததால், கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. மேலும் சிவசேனாவானது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார்.
இது தொடர்பாக இருதரப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரணை செய்து வருகிறது. அமர்வானது இந்த வழக்கு பற்றி குறிப்பிடுகையில், "ஆளுநரின் அதிகாரத்தைப் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அதே நேரம் ஆளுநர் அரசைக் கவிழ்ப்பதில் துரிதமாகச் செயல்படக் கூடாது. ஆளுநர்கள் இவ்வாறு அரசியலில் ஈடுபடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்துவிடும். சிவசேனாவில் உட்கட்சிப் பிரச்சனை எழுந்தபோது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவசரம் காட்டினார். உட்கட்சிப் பிரச்சனைக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட முடியுமா? இவ்வாறு உத்தரவிட ஆளுநருக்கு போதிய ஆதாரங்கள் வேண்டும்" எனத் தெரிவித்தது.
இந்நிலையில் தான் நீதிபதிகளின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "தன்னால் வெற்றி பெற முடியாது எனக் கருதி உத்தவ் தாக்கரே பதவி விலகியதை அடுத்து எப்படி அவரை பதவியில் அமர்த்த முடியும். ஒருவேளை அவர் சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடத்தி இருந்தால் கூட ஆளுநரின் உத்தரவை ரத்து செய்வது பற்றி நாங்கள் முடிவு எடுத்து இருக்க முடியும்" என்றனர்.
மகாராஷ்டிரா மாநில அரசியல் நெருக்கடி மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.