'Split with EPS... Pending case...'- OPS meets supporters!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த ஓபிஎஸ் தரப்பு, பின்னர் இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி அமர்விலிருந்து மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின், நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, இந்த வழக்கைக் கிருஷ்ணன் ராமசாமி முன்பே நடத்த விரும்புவதாக தெரிவித்தது.

Advertisment

இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதியே முடிவு செய்யட்டும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் வர இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்த வழக்கு மீண்டும் புதியதாக நியமிக்கப்பட்ட நீதிபதியால் விசாரிக்கப்பட இருக்கிற நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை 5 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற இருப்பதாகவும், சேலம், ராணிப்பேட்டை,கிருஷ்ணகிரி,வேலூர் உள்ளிட்ட மாவட்ட ஆதரவாளர்கள் பங்குகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இபிஎஸ் உடன் ஏற்பட்ட அரசியல் பிளவுக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில் இன்று மாலை நடைபெறும் ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisment