தமிழநாட்டில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின், விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், தி.மு.கவினரும், தமிழக அமைச்சர்கள் சிலரும் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘என்னை துணை முதல்வராக்க வேண்டும் எனத் தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். எஸ்.எஸ். பழனிமாணிக்கமும் நேற்று இதே விருப்பத்தை தெரிவித்து இருந்தார். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்” எனத் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவில் வலியுறுத்தப்பட்டு வருகிறதே எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “அந்த நாள் எப்போது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம் கலக்கப்பட்டதாக வந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்களே. எப்படி பல வருடங்களாக பழங்களை வைத்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறதே தவிர, திருப்பதியில் இருக்கும் குற்றச்சாட்டுகள் மாதிரி இதுவரை இங்கு நடைபெறவில்லை. மொட்டை காலுக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம். எங்ககிட்ட ஆவின் இருக்கு. அதை வைத்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. நன்றாகவும் இருக்கிறது” என்று கூறினார்.