தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுள் ஒன்று அதிமுக. பல்வேறு உட்கட்சிப் பிரச்சனைகளைத் தாண்டி ஓரணியில் திரண்ட எடப்பாடி தலைமையிலான அதிமுக, தாங்கள் தூக்கிச் சுமக்கும் வீண் சுமையாக பாஜக கூட்டணியை பார்த்தது. இதனால், பாஜக மற்றும் அதிமுக தலைவர்களிடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. விளைவு, அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளாமல் மென்மையான போக்கை கையாளுவதால், இது ஒரு பொய்யான நாடகம் என எதிர்க்கட்சிகள் பலவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.
ஆனால், இத்தனை நாளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால்தான் நமக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியத் தலைவர்களையும், கிறிஸ்தவ தலைவர்களையும் தேடித் தேடிச் சென்று சந்தித்து வந்தார். இந்த நிலையில், கோவை முப்பெரும் விழா மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரம், மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் மற்றொரு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில், முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், கிறித்துவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், உரிய அனுமதி பெறாமலும் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பதாகைகளை போலீசார் அகற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தவர்கள், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திரண்டு, பேனர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநாட்டு பந்தலை பார்வையிடுவதற்காக வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது வேலுமணி, "காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இங்கு என்னால் வரவைக்க முடியும். நான் போய் சாலை மறியலில் ஈடுபடவா? நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற கொறடா. உங்களுக்குப் பிரச்சனை என்றால் உயர் அதிகாரியை வரச் சொல்லுங்கள்.. வக்கீல எதுக்கு மிரட்டுறீங்க.." என காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், வேலுமணியுடன் இருந்த சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ. கனகராஜ் மற்றும் அதிமுகவினரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக பேனர்கள் வைக்க மட்டும் அனுமதி கொடுக்கும் போலீஸ், எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை எனவும், கிருஸ்தவர்கள் நடத்தும் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது எனவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுமாறும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்ற வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து கிறிஸ்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கிறித்துவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி நிகழ்வுகளின் போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர். திமுக அரசு சமூக நீதி பேசுவதாக கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். அதைத் தற்போது அரசியலாக முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். நள்ளிரவு சமயத்தில் அதிமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு, கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.