Skip to main content

“பதவி விலக வேண்டும் அல்லது விலக்க வேண்டும்” - அமைச்சர் குறித்து புகார் வாசித்த இ.பி.எஸ்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

"Should resign or be removed" - EPS reads complaint against minister

 

கள்ளச்சாராய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச் சாராயத்தை அருந்தி  22 பேருக்கு மேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய திமுக நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழகக் காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

 

அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்ட விரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல்துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி திமுக நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4 ஆவது வார்டு உறுப்பினர் லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16 ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்கராயன்பேட்டை கிளையின் திமுக செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி திமுக நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு ஆதரவாளர்களாக இருப்பதால், கடந்த இரண்டு வருடங்களாக அரசின் காவல்துறை இவர்களது நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்தும் கைது செய்யாமல் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டி வந்துள்ளது. மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாகச் செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறு இழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சப்பைக் கட்டு கட்டும் வகையில் வசனம் பேசிக்கொண்டிருந்தால், அல்லலுறும் தமிழக மக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள நிவாரணத்தொகைக்கு டோக்கன்; அமைச்சர் உதயநிதி தகவல்!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Minister Udhayanidhi information about providing token for flood relief fund

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவாரண தொகையாக அரசு வழங்கவுள்ள ரூ. 6 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில்,“மத்திய அரசு ஒதுக்கியுள்ள 450 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது. பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 6 ஆயிரம் ரூபாய் போதாது என விமர்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், டெல்லியில் உள்ள மத்திய அரசின் தங்கள் நண்பர்களிடம் வலியுறுத்தி கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். அதன்படி10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். .

Next Story

கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - தமிழக முதல்வர் உத்தரவு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Tamil Nadu Chief Minister orders Special camps to recover documents free of charge –

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பலருடைய புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் மழைநீரில் சேதமடைந்துள்ளது என்று பலரும் தங்களது வேதனையைத் தெரிவித்து வந்தனர். அதேபோல், மக்களின் பலருடைய முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எனப் பல ஆவணங்கள் சேதமடைந்ததாகவும், மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.  

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் ஒன்றை அமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11 ஆம் தேதி அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12 ஆம் தேதி அன்றும் தொடங்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.