Skip to main content

சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Shivraj Singh Chauhan resigns

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேலை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்?’ - சோனியா காந்தி விளக்கம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
 Sonia Gandhi explained Why she doesnot contest the Lok Sabha elections?

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை நேற்று (14-02-24) தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்தும் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘உங்களின் நம்பிக்கையை மதிக்கும் விதமாக என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் நான் செய்து வருகிறேன். தற்போது உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது இந்த முடிவுக்கு பின்னர் என்னால் நேரடியாக உங்களுக்கு சேவை செய்ய முடியாது. ஆனால், எனது எண்ணங்களும், மனதும் எப்போதும் உங்களுடனேயே இருக்கும்.

என் மாமியார் மற்றும் எனது வாழ்க்கைத் துணையை நிரந்தரமாக இழந்து நான் உங்களிடம் வந்தபோது, என்னை நீங்கள் இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்டீர்கள். நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ, அது உங்களால் தான் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். அந்த நம்பிக்கைக்கு உண்மையாக வாழ முயற்சிப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பா.ஜ.க.வின் அத்தனை பாவங்களுக்கும் அ.தி.மு.க உடந்தையாக இருந்துள்ளது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
CM Stalin says ADMK has been complicit in all the sins of BJP

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்தும், தேர்தல் பணிக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் தனது திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘மத்திய பாஜக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ளனர். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலமாகத் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவைக் காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு இருக்கிறது. பா.ஜ.க - அதிமுக மறைமுகக் கூட்டாளிகளின் நேரடித் துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். 10 ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் துரோகம், மோசடிகளை துண்டறிக்கையாக அச்சிட்டு வீடு வீடாகச் சென்று தர வேண்டும்.

தற்போது பா.ஜ.க சொல்லிக் கொடுத்தது போலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பா.ஜ.க செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அதிமுக. 10 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்து போனதை எடுத்துரைக்க வேண்டும். உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் அமைந்திட வேண்டும். பாசிதத்தை வீழ்த்தி, ‘இந்தியா’ வென்றிட களத்தை அமைத்து தரும். உழவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள் ஆணி படுக்கைகளை போட்டிருக்கும் கொடூரம் நிகழ்ந்துள்ளது. விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெறவில்லை. இதில் யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா? 

தேர்தல் பணிகளை விரைந்து தொடங்கிய இயக்கமாக தி.மு.க முன்னணியில் இருக்கிறது. தி.மு.க என்பது மாநிலக் கட்சிதானே என்று எள்ளி நகையாட நினைத்தவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் திமுகவை விமர்சித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மதவெறி அரசியல் நடத்தும் பாஜகவை கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் உண்டு.

திமுக எனும் பேரியக்கத்தால் பாஜக கட்சியின்  நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான். மோடி, அமித்ஷா, நட்டாவை தூங்க விடாம செய்கிறது திமுக. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமைகள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும், வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும். இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.