Skip to main content

ஸ்டாலின் திமுகவின் தலைவரானது பெரிய சாதனை, ஏன்னா... ! - சீமான் கிண்டல்  

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் மறைந்து, நேற்று அந்தக் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மாநில அரசை முதுகெலும்பில்லாத அரசு என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான், ஸ்டாலினையும் திராவிட அரசியலையும் விமர்சித்துப் பேசினார். அவர் பேசியது... 

 

seeman



"திராவிட முனேற்றக் கழகத்தின் புதிய தலைவராக ஐயா ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். ஒரு தலைவரின் மகன் மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சு தலைவர் ஆகியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் இப்படித்தான் பேசுகிறார் 'படிப்படியாக, உழைத்து, கஷ்டப்பட்டு தலைவர் ஆகியிருக்கிறேன்' என்று ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய சாதனை!!! அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் தலைவரானது சாதனையாம்... ஏன்னா அவரு படிப்படியா வந்தாராம்.

'தமிழ் இனமே உனக்காக நான் உயிர் உள்ள வரை பாடுபடுவேன்' என்று அவர் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் இனவாதிகள், ஃபாசிஸ்ட்டுகள், தூய இனவாதிகள் என்பார்கள். கலைஞர் ஐயாவே  'நாமெல்லாம் தமிழர் என்ற உணர்வை பெற வேண்டும்' என்று ஒரு மேடையில் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் அது குற்றமாகிறது. ஏன் அவர்கள் 'திராவிட இனமே உனக்காக நான் பாடுபடுவேன்' என்று சொல்லவில்லை? ஏன் என்றால் இங்கே யாரும் திராவிடர்கள் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். இதுவரை அங்கு யாருக்கும் திராவிடம் என்றால் என்னவென்ற சரியான தெளிவு, சரியான பதில் எதுவும்  இல்லை. முதலில் ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்றார்கள், திராவிடம் என்று இல்லாமல் தமிழர் என்று இருந்திருந்தால் பிராமணர்கள் 'நாங்களும் தமிழர்' என்று கட்சியில் சேர்ந்துவிடுவார்கள் என்றுதான் இவர்கள் காரணம் சொன்னார்கள். ஆனால் என் கட்சியில் ஒரு பிராமணனும் இல்லையே, நானும் 'தமிழன்' என்றுதான் பெயர் வைத்துள்ளேன். ஆனால் முப்பத்திஐந்து ஆண்டுகளாக ஒரு பிராமண பெண் அந்த திராவிட கட்சிக்கு தலைவராக இருந்துவிட்டு போனார். யாரை சொல்லுகிறேன் தெரிகிறதா?

 

 


திராவிட சுடுகாட்டில் மூன்று பேர் படுத்திருக்கிறார்கள், அவர்களுடன் அந்தப் பெண்மணியும் படுத்திருக்கிறார்கள். நல்லவேளை அதில் காமராஜருக்கு இடம் தரவில்லை. அந்த திராவிட சுடுகாடு நமக்கு தீண்டத்தகாத இடம், அங்கேதான் இவர்கள் எந்த ஆரியத்தை எதிர்த்து புரட்சி செய்தர்களோ அதே ஆரியத்தை சேர்ந்த பெண்மணியும் இருக்கிறார். அவர்களுடன்தான் இவரும் படுத்திருக்கிறார். ஆரியத்தை எதிர்க்க வந்த திராவிடம் மண்டியிட்டுக் கூட நிற்கவில்லை, அப்படி நின்றியிருந்தால்கூட தாண்டி போவது கடினம். இப்போது மல்லாக்கப் படுத்துவிட்டது.

 

 


அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை யுத்தம் ஆரியத்துக்கும் தமிழியத்துக்கும்தான் நடந்துகொண்டு இருக்கிறது. இடையில் திராவிடன் அறுவடை செய்துவிட்டான். இனியும் ஆரியம் என்பதை வைத்து ஓட்ட முடியாது என்று தெரிந்துகொண்டு 'ஆதிக்கத்துக்கு எதிரானது திராவிடம்' என்கிறான். சரி ஆதிக்கம் என்றால் சாதியா, வர்க்கமா அல்லது அதிகார ஆதிக்கமா என்று கேட்டால் பதில் இல்லை. அடுத்தது சமூகநீதிதான் திராவிடம் என்கிறார்கள். அப்படியென்றால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சமூகநீதி இல்லையா? தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா? சரி அப்படியே வைத்துக்கொள்வோம் என்னதான் உங்கள் சமூகநீதி? நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிறமொழி பேசும் மாநிலத்திற்கெல்லாம் இடஒதுக்கீடு இருக்கிறது. இதுதான் உங்கள் சமூகநீதியா?" 

 

 

 

சார்ந்த செய்திகள்