தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் சென்றிருந்த தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்பது நாள் பயணம் முடிந்து தற்போது தமிழ்நாடு திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு ஏராளமானோர் ஒன்று கூடி வரவேற்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக அரசு நடத்த உள்ளது. 3,223 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் ஐந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தியில் உலகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது ஜப்பான் நாடு.அதே நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரும் உற்பத்தி மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பதுதான் திமுக உடைய குறிக்கோள்.
இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஜப்பான் நாட்டிற்குச் சென்று ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளை அவர் நடத்தினார். குறைந்தபட்சம் 3,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம். அன்றைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இப்போதைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும், தொழில்துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டனர்''என்றார்.
'செங்கோலை பிரதமர் வாங்கிய அன்றே அது வளைந்து விட்டது. மல்யுத்த வீரர்களை கைது செய்த பொழுதே செங்கோல் வளைந்து விட்டது. அதுவே அதற்கு சாட்சி. நாளை மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரும் என்னை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். நேரம் கொடுத்திருக்கிறேன். நாளை சந்திப்பேன்'' என்றார்.