Skip to main content

சாத்தான்குளம் காவல் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

 

salem

 

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் காவல் மரண வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்து வரும் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியது.

 

சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, 1022 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்காக, தற்போது 1102 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பூங்கா மேலும் விரிவுபடுத்தப்படும். 

 

தற்போது நிர்வாக அலுவலக கட்டடம், கல்வி சார் கட்டடங்கள், நூலக கட்டடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட 20 கட்டடப் பணிகள் 3.72 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. கால்நடை பண்ணை வளாகம், பால் பதப்படுத்தும் வளாகம், மீன் வள வளாகம், முதுகலை படிப்பு வளாகம், நீடித்த மற்றும் திறன் மேம்பாட்டு வளாகம், ஆராய்ச்சி, இறைச்சி உற்பத்தி, தீவன ஆராய்ச்சி மண்டலம், சர்வதேச விருந்தினர் இல்லங்கள் இவற்றில் அடங்கும். 

 

இந்தப் பூங்கா அமைவதன் மூலம் நாட்டின மாடுகள், நாட்டுக்கோழி இனங்கள், நாட்டு நாய் இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

இதையடுத்து அவர் செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதில் அளித்ததாவது: 

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். 

 

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தமிழக அரசே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரும்போது, அரசு இதுகுறித்து தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்று சி.பி.ஐ.-யிடம் வழக்கை ஒப்படைக்கும்.

 

ஏற்கனவே காவல்துறைக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பிரச்னை என்றால் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தேவை இல்லாமல் மக்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

கரோனா வைரஸ் தொற்று என்பது, தமிழகத்தில் மட்டுமின்றி உலகளவில் இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி, உலுக்கிக் கொண்டிருக்கிற கொடிய நோய் வைரஸ் நோய். இதுகுறித்து ஒவ்வொரு மருத்துவ நிபுணர்களும் வெவ்வேறு விதமாகச் சொல்கிறார்கள். எப்படிப் பரவுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இது புதிய நோய். இப்போதுதான் உலகத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்திற்கும் பரவி இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு, தமிழக அரசு கடுமையாக முயற்சி எடுத்துள்ளது.

 

கடந்த மூன்று மாத காலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

 

இந்தியாவிலேயே அதிகளவில் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு. புதிய நோயாக இருப்பதால், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி மருந்து இருந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து குணப்படுத்தி இருக்கலாம். 

 

இந்த நோயால் உலகமே உறைந்து போயிருக்கிறது. அப்படியான சூழ்நிலையில், தமிழகத்தில் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஐ.சி.எம்.ஆர்., மருத்துவ வல்லுநர்கள் கொடுக்கின்ற ஆலோசனைகளைப் பெற்று நம்முடைய மருத்துவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

 

மற்ற மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசு எந்திரம், நோய்த்தடுப்புப் பணிகளில் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுதான் எங்களின் தலையாய கடமை. 

 

தினந்தோறும் ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியாகத்தான் அறிக்கை விடுகிறார். நோய் சம்பந்தமாக ஏதாவது சொல்லி இருக்கிறாரா? தினமும் அரசை பற்றியும், முதல்வரை பற்றியும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் வீட்டிலேயேதான் அமர்ந்து இருக்கிறார். ஏதோ ஓரிரு நாள் போய் நிவாரணம் வழங்குவதுபோல் காட்டிக்கொண்டார். 

 

நாங்கள், எங்களால் முடிந்தவரை முயற்சி எடுத்து வருகிறோம். கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறிக்கொண்டு இருக்கிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டது. விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவையும் வழங்கப்பட்டது. சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கே எல்லா குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. 

 

http://onelink.to/nknapp

 

திங்கள்கிழமை தினம் மருத்துவ வல்லுநர்கள் கூட்டம் இருக்கிறது. அடுத்தக்கட்டமாக ஊரடங்கு தொடர்பாக என்ன முடிவெடுப்பது என்பது குறித்து அக்கூட்டத்தில் நடக்கும் ஆலோசனைகளை வைத்து அரசு முடிவு செய்யும். 

 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 

முன்னதாக, சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டியில் 19.17 கோடி ரூபாய் மதிப்பிலான சேலம் - ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான புனரமைப்புப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்