மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு அப்பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.
இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று (28-11-2024) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மேலூரில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் அமைச்சர் மூர்த்தி, “டங்ஸ்டன் சுரங்க ஆய்வுக்கு கூட தமிழக அரசு அனுமதிக்காது” என உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த 2023 அக்டோபர் மாதம் திமுக அரசு தான் அனுமதி கேட்டதாக நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் தெரிவிகின்றன. அனுமதியை ரத்து செய்யக்கோரி கடிதம் எழுதிய "பேனா வீரர்" , அனுமதி கேட்டதே தனது அரசு தான் என்பதை மறைத்தது ஏன்? நீட் தேர்வைக் கொண்டு வந்து விட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுகிறது. திமுக அரசு மக்களை சுரண்டி சுரங்கம் அமைத்து , மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க திரைமறைவில் முயற்சி எடுத்து விட்டு, தற்போது செய்யும் இந்த கடித கபடநாடக ஏமாற்று வேலைக்கு, மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்' என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த 2023 அக்டோபர் மாதம் விடியா திமுக அரசு தான் அனுமதி கேட்டதாக நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் தெரிவிகின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 29, 2024
அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிய "பேனா வீரர்" @mkstalin, அனுமதி கேட்டதே தனது அரசு தான் என்பதை மறைத்தது ஏன்?
நீட்… pic.twitter.com/OEw7A6V0jp