Skip to main content

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை! அன்புமணி

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
anbumani ramadoss

 

 

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரஷ்யாவின் வோல்காகிராட் மாநிலத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த மாணவர்களுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

 

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் வோல்காகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர். வார விடுமுறையில் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்க சென்றபோது ஒரு மாணவர் நீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்த ஸ்டீபன், அந்த மாணவரைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் இரு மாணவர்களும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது.

 

கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின் பிள்ளைகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் மருத்துவர்களாக திரும்பி வருவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் இந்த செய்தி எந்த அளவுக்கு பேரிடியாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. அவர்களின் துயரத்தை பா.ம.க.வும் பகிர்ந்து கொள்கிறது.

 

ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை என்றும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது இறுதியானதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.