சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று (06-12-24) நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி இருந்தார்.
அப்போது பேசிய அவர், “நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முறையாக முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு அமைந்து விட்டாலே போதும். இங்கு நடக்கின்ற பிரச்சனைகளுக்கு சம்பிரதாயத்துக்காக டிவிட் போடுவது. சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்துக்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என காட்டிக்கொள்வது, சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்று கொண்டு போட்டோ எடுப்பதும். எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனா என்ன பண்றது நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரம் அதுபோன்று செய்ய வேண்டியது ஆகிவிட்டது.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள்” என்று திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இவரது பேச்சு, தற்போது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திரையுலகில் விஜய் மைனஸ் ஆகிவிட்டார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “திரையுலகில் விஜய் மைனஸ் ஆகிவிட்டார். அப்படி ஆனதால் தான் அரசியலுக்கு வந்துள்ளார். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்று கூறினார்.