Skip to main content

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்! 

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

ramadoss

 

அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் தமிழக ஆளுனர்தான் என 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் அரசின் முடிவுகள், தீர்மானங்கள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணை மாணவர்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தைப் போக்க வேண்டுமே தவிர, மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடக் கூடாது.

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க, ஆளுனர் கால தாமதம் செய்யப்பட்ட நிலையில், ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொடக்கம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டு 45 நாட்களாகியும் ஆளுனர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசு இப்போது தன்னிச்சையாக அரசாணை பிறப்பித்துள்ளது.

 

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; ஆனால், ஆளுனர் தேவையின்றி காலதாமதம் செய்து வருவதால், நடப்பாண்டில் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போய்விடக்கூடும்; இத்தகைய சுழலில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இவ்வாறு செய்திருப்பதாக அறிய முடிகிறது.

 

அரசியலமைப்புச் சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொள்கை முடிவு எடுத்து இந்த அரசாணையை பிறப்பித்திருப்பதாக  அரசு விளக்கமளித்துள்ளது.  சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இப்படி ஓர் அரசாணையைப் பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் ஆய்வில் தாக்குபிடிக்குமா? என்பது தெரியவில்லை.

 

cnc

 

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாள் இன்று வரை நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு வேளை கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, உச்சநீதிமன்றத்திற்கு சென்று, நிலைமையை விளக்கிக் கூறி கூடுதல் அவகாசத்தைப் பெற முடியும். அதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே, ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதுதான் சரியாக இருக்கும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், அதை, தலைசிறந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்து வலிமையாக எதிர்கொண்டு 7.5% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க போதிய சட்டப்பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

 

7.5% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் தமிழக ஆளுனர்தான். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 45 நாட்களுக்கு மேலாகியும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு ஆளுனர் தரப்பில் கூறப்படும் காரணங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இல்லை. இனியும் இந்தச் சிக்கலை தீவிரப்படுத்தாமல் இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் அரசின் முடிவுகள், தீர்மானங்கள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.