/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/458_8.jpg)
சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள வரைவோலைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வரைவோலைகளை வழங்கினார்.
இதன் பின் விழாவில் பேசிய அவர், “அனைத்து துறையும் வளர வேண்டும் என்று எண்ணுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள் எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கிற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு நான் தெரிவிப்பது, ‘நாங்கள் மதவாதத்திற்குத்தான் எதிரிகள். மதத்திற்கு எதிரிகள் அல்ல’. இதை அறிய வேண்டியவர்கள் அறிந்து கொண்டால் போதும்.
இந்த திருக்கோவில் பணிகளைப் பொறுத்தவரை நாங்கள் எதுவும் செய்யவில்லை. அதற்கான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில்தான் நாம் செய்து கொண்டுள்ளோம். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் உள்ளது. பழமையான கோவில்களைப் புதுப்பிக்க, அதே சமயம் பழமை மாறாமல் அதை சீர் செய்ய குடமுழுக்கு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில்களே கலைச் சின்னங்கள், பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத் திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. அதைக் காப்பது அரசின் கடமை.
கோவில்கள் சமத்துவம் உலவக்கூடிய இடங்களாக அமைய வேண்டும் என்பதில் முழு கவனம் இருக்கிறது. எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது. ஏழைக் கோவில் பணக்காரர் கோவில், கிராம கோவில், நகரக் கோவில் என வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது. எந்தக் கோவிலாக இருந்தாலும் அனைத்தையும் ஒன்று போல கருதி உதவி செய்யும் அரசுதான் திராவிட மாடல் அரசு.மதம், சாதி வேற்றுமை மட்டுமல்ல கோவில், சாமி வேற்றுமையும் அரசுக்கு இல்லை.” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)