Skip to main content

வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இ-பாஸ் முறையை கைவிட வேண்டும் -ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
E.R.Eswaran

 

வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தேவையான இ-பாஸ் முறையை கைவிட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு ஊரடங்கில் எவ்வளவு தளர்வுகள் அறிவித்தாலும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதால் தொழில்துறை இயங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுமே இ-பாஸ் பெற்று பயணிப்பது என்பது இயலாத ஒரு காரியம். மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக உண்மைநிலை சொல்லி அரசு கேட்கும் தகவல்கள் அனைத்தையும் கொடுத்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்கு செல்பவர்கள் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை பெற முடிவதில்லை. 

 

பக்கத்து மாவட்டத்தில் உள்ள பெற்றோரை பார்க்க முடியாமல் பிள்ளைகளும், பிள்ளைகளை பார்க்க முடியாமல் பெற்றோரும் பாச போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். முக்கிய காரணங்களுக்காக வெளியே பயணிக்க முடியாமல் பலர் மனவேதனையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். படித்த விழிப்புணர்வு உள்ளவர்களுக்கே இ-பாஸ் முறை மிகவும் சிரமமானதாக இருக்கிறது. படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால் படிப்பு அறிவில்லாத சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

 

சிறு, குறு தொழில்களை செய்பவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை மற்ற மாவட்டங்களில் உள்ள பெரும் நிறுவனங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் தொழில் நிறுவனங்களை தொடர்ச்சியாக நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். நஷ்டத்தை தவிர்ப்பதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் வேலையாட்களை குறைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். தினந்தோறும் பக்கத்து மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள்  இ-பாஸ் முறையினால் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதேபோல ஊரடங்கினால் சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்களை நிறுவனங்கள் அழைத்தும் பணிக்கு திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். அரசின் உத்தரவை மதித்து இ-பாஸ் விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படுவது ஏன்?. 

 

விவசாயிகளும் இ-பாஸ் முறையினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். குடியிருக்கும் மாவட்டமும் விவசாயம் நிலம் இருக்கும் மாவட்டமும் வேறுவேறாக இருப்பதால் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அருகருகே உள்ள மாவட்டங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டினால் விளைவித்த பொருட்களை விற்க முடியாமலும், வியாபாரிகள் வாங்க முடியாமலும் செய்வதறியாமல் இருக்கிறார்கள். விளைவித்த பொருட்கள் வீணாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

 

இ-பாஸ் முறையை கைவிட்டால் மட்டுமே அனைத்து தொழில்களும் வேகமெடுக்கும். இதுவே இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். பல தளர்வுகள் கொடுத்திருந்தாலும் இ-பாஸ் முறையில் மக்களுக்கு உள்ள சிரமங்களை புரிந்து கொண்டு இன்றைக்கு கைவிடுவது சாலச்சிறந்ததாக இருக்கும் என்று தமிழக அரசையும், தமிழக முதலமைச்சரையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''ஆருத்ரா மோசடி வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை'' - ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

"Charge-sheet within a month in Arudra fraud case"- IG Asiyammal interview

 

ஆருத்ரா மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், ''பொருளாதார குற்றப்பிரிவில் இதுவரை நான்கு மிகப்பெரிய வழக்குகள் பதிவு செய்து விசாரணையில் இருந்து வருகிறது. ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எஃப்.எஸ் மற்றும் எல்பின் இந்த நான்கு வழக்குகளிலும் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆருத்ரா கம்பெனி 2020 வருடத்திலிருந்து 2022 வரை 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக டெபாசிட்டாளர்களிடம் கூறி மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளது.

 

இதில் மொத்தம் பெறப்பட்ட முதலீட்டாளர்களின் புகார்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரம். இதில் ஏமாற்றப்பட்ட தொகை சுமார் 2,438 கோடி. இந்த வழக்கில் மொத்தம் 21 குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறு நிறுவனங்கள் அடங்கும். இதுவரை எட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 நபர்கள் இயக்குநராக செயல்பட்டவர்கள். இவ்வழக்கு தொடர்பாக  54 இடங்களில் சோதனைகள் நடைபெற்றுள்ளது. சோதனைகளில் 5 கோடியே 57 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தங்கம் 2.2 கிலோ மற்றும் வெள்ளி 1.9 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது. 18 கார்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

120 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தொகை 96 கோடியாகும். மேலும் 97 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபமாக 15 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதனையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஹரிஷ், தீபக்கோவிந்த் பிரசாந்த் நாராயணி ஆகிய குற்றவாளிகளுக்கு எல்.ஓ.சி வழங்கப்பட்டுள்ளது. ராஜசேகர், மைக்கேல், உஷா ஆகிய மூவரும் கம்பெனியின் இயக்குநர்கள் ஆவார்கள். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை கைது செய்ய ஆர்.சி.என் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 550 முதலீட்டாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.'' என்றார்.

 

 

Next Story

1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை நோக்கி தமிழ்நாடு கருத்தரங்கு (படங்கள்)

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு வளர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன் ஒரு பகுதியாக சென்னையில், '1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை நோக்கி தமிழ்நாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.