Skip to main content

இராம.கோபாலன், இல.கணேசன் ஆகியோர் நலம்பெற்று மீண்டும் பணி தொடர விழைகிறோம்! - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

ddd

 

இராம.கோபாலன், இல.கணேசன் ஆகியோர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என்று விரும்புவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் அவர்கள், கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என்ற நம் விழைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஏற்கெனவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன் அவர்களும் நலம் பெற்று மீண்டும் தம் பொதுவாழ்வைத் தொடரவேண்டும் என்றும் விரும்புகின்றோம்.

 

கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது'' என்று கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்தவர்; சொன்ன நாளிலேயே இறந்தவர்” - இல.கணேசன் புகழாரம்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

“தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்தவர்; சொன்ன நாளிலேயே இறந்தவர்” - இல.கணேசன் புகழாரம்

 

எழுத்தாளர் பாலகுமாரன் அறக்கட்டளை சார்பில் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. 2023ம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன், நடிகர் டெல்லி கணேஷ், நக்கீரன் ஆசிரியர், ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் நானாக விரும்பி இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். ஆளுநர் என்பதைக் கடந்து இல.கணேசனாக பாலகுமாரன் சம்பந்தப்பட்ட விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். வண்ணநிலவன் குறித்து இதற்கு முன்பு எனக்குத் தெரியாது. இப்போதுதான் தெரிந்தது துர்வாசர் என்கிற பெயரில் அவர் எழுதி வந்தது. துர்வாசராக அவர் எழுதிய எழுத்துக்களை நான் நிறைய படித்திருக்கிறேன்.

 

டெல்லி கணேஷ் அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நக்கீரன் ஆசிரியர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். வாஜ்பாய் அவர்களோடு நக்கீரனுக்கு ஒரு சிறப்பு பேட்டியை நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களுடைய எழுத்துகள் சக்தி வாய்ந்த எழுத்துகள். எதிர்காலம் குறித்து தெளிவாகச் சொல்லக்கூடியவர் ஷெல்வி. எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதைச் செய்துகாட்ட வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒவ்வொரு ஆண்டும் பாலகுமாரன் குறித்த நினைவு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்கிற உறுதியைக் கொண்டிருக்கிற அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய நன்றி. 

 

ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டபோது அந்த இடத்திற்கு வந்து அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார் பாலகுமாரன். அப்போதுதான் அவரை நான் முதல் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு எங்களுடைய நட்பு தொடர்ந்தது. அவருடைய குடும்பத்தை நான் என்னுடைய குடும்பம் போல் தான் நினைக்கிறேன். ஒரு பெண் எப்படி சிந்திப்பாள் என்பதைச் சரியாக எழுதக்கூடியவர் பாலகுமாரன். நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் எழுதியதைப் பார்த்துப் பலர் திருந்தியிருக்கின்றனர். யோகிராம் சுரத்குமார் அவர்களோடு தொடர்பு ஏற்பட்ட பிறகு ஆன்மீகத்தில் அவருக்கு பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. 

 

அவருடைய மரணத்தை அவர் முன்பே கணித்திருக்கிறார். சித்தர் என்றே அவரை நான் அழைக்க விரும்புகின்றேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி. வண்ணநிலவன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

 


 

Next Story

"பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்"-  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்! 

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

tamilnadu bjp and rss leaders homes incident pmk ramadoss statement

 

பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (25/09/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை உட்பட தமிழ்நாட்டில் 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள்  கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

 

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது கடந்த 22- ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த குண்டு வெடிக்காததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனால், பொதுமக்களும், காவல்துறையினரும் நிம்மதியடைந்த நிலையில், கோவை மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தான் மக்களின் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

 

கோவையில் தொடங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பரவியிருக்கின்றன. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் சென்னை சிட்லபாக்கம், சேலம், கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த செய்திகள் வருவதை அலட்சியப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதல்களில் மனித உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கூட பொது சொத்துகளும், தனிநபர் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுத்து என்ன நிகழுமோ? என்பது குறித்த அச்சம் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களின் மக்களிடம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

 

தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று தமிழகம் அமைதிப்பூங்கா என்பது தான். இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பராமரித்ததை தங்களின் சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டு வருவதை நாம் அறிவோம். அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் 20- க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; அவற்றின் சி.சி.டி.வி காட்சிகளும் பெளியாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் ஓரிருவரைத் தவிர, பெட்ரோல் குண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த அறிவிப்புகள் மட்டுமே நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடாது; கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

 

தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.