Skip to main content

ரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன்? ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்! 

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தமிழகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. சென்னையில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் சோவின் நெருங்கிய நண்பரான ரஜினியும் கலந்துக்கிட்டதால் அந்த விழா, கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 1996-ல் தி.மு.க.வோடு த.மா.கா. கூட்டணி வைத்திருந்த போது சோ சொல்லித்தான் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக அப்போது ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அதுக்குப் பிறகு அவர் சொல்லித் தான் ஜெ.வுக்கு ஆதரவாவும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாவும் அடுத்தடுத்து வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்தார். 

 

rajiniதற்போது சோ இல்லாத நிலையில், துக்ளக் விழாவில் ரஜினி என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வம் எல்லாப் பக்கமும் அதிகமாவே இருந்தது. அவருக்கு முன்னதாகப் பேசிய துக்ளக் ஆசிரியரான குருமூர்த்தி, ரஜினி நல்லா யோசித்து அரசியலுக்கு வருவது பற்றி நல்ல முடிவெடுப்பார் என்று கூறி ரஜினிக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டார். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துக்கிட்ட இந்த விழாவில் புரோட்டாகால்படி, குறித்த நேரத்தில் பேசி முடிக்கவேண்டும் என்பதால், தன்னை வளைத்த நிர்பந்தத்திலிருந்து தப்பிக்கும் வகையில், அரசியல் பேசுவதைத் தவிர்த்தார். அவர் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

bjp1971-ல் ராமர் சிலையை பெரியார் தாக்கினார் என்று ரஜினி கூறியது, யாரோ அவருக்கு தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. மேலும் யாரோ எடுத்துக் கொடுத்த குறிப்பை வைத்துக்கொண்டு, ரஜினி அப்படி பேசியுள்ளார். உண்மையில் அப்போது என்ன நடந்தது? ராமரை யார் தாக்கியது? என்று, சுப.வீ., நம் நக்கீரன் யூடிப்பில் விளக்கமாகப் பேசியிருந்தார். இந்த பெரியார் சப்ஜெக்ட்டைத் தாண்டிய ரஜினி, ’யாராவது முரசொலியைக் கைல வச்சிருந்தா அவங்க தி.மு.க.காரங்கன்னு அர்த்தம். துக்ளக்கைக் கைல வச்சிருந்தா அவங்க அறிவாளின்னு அர்த்தம்னு சொன்னார். ரஜினியின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முரசொலி பவளவிழா மேடையில் ஏறி, அந்த மலரை கையில் வாங்கியபோது ரஜினிக்கு இந்த ஞானோதயம் ஏன் ஏற்படலைன்னு ஆளாளுக்கு விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.


கலைஞர் இருந்தவரை எந்த அரசியல் சூழலிலும்... "என் அன்புத் தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினி'ன்னு தானே குறிப்பிட்டார். ஸ்டாலினும் கூட முரசொலியில் ரஜினி பற்றி வந்த விமர்சன கட்டுரைக்கு வருத்தம் வெளியிட வைத்தார். ஆனால் தற்போது அவரை தி.மு.க. தரப்பு ஏன் கடுமையாக விமர்சிக்கிறது என்று விசாரித்த போது,  கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் ரஜினியை முழுக்க தங்கள் பக்கம் திருப்ப... பா.ஜ.க. தீவிரமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி அவரை மேடை ஏற்றி வருகின்றனர். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்டில் சென்னையில் நடந்தது. இதில் பேசிய ரஜினி, மோடியையும் அமித்ஷாவையும் கிருஷ்ண பரமாத்மாவோடும் அர்ஜுனனோடும் ஒப்பிட்டுப் பேசியது விமர்சனமானது. 

இந்த நிலையில், கலைஞரின் மூத்த பிள்ளைன் என்று வர்ணிக்கப்படும் முரசொலியை, ரஜினி துக்ளக் விழாவில் விமர்சித்ததை, முரசொலியின் எம்.டி.யாகவும் இருக்கும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினால் பொறுத்துக்க முடியவில்லை. உடனே, டுவிட்டரில் "முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவர்னா புரட்சித் தலைவர், தைரியலட்சுமின்னா அம்மா என கால் நூற்றாண்டாகக் கால்பிடித்து காலம் கடத்தி "‘தலை’ சுத்திரிச்சி' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியைக் கையில் ஏந்துகிற பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க.காரன். நான் தி.மு.க.காரன்னு பொங்கல் வாழ்த்தோடு பதிலடி கொடுத்திருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


ஏற்கனவே, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து தி.மு.க. பேரணிக்கு அழைப்பு விடுத்த நேரத்தில், போராட்டம் நடத்துறது வன்முறை என்று ரஜினி கருத்து கூறினார். அப்போதும் உதயநிதி, வயதான பெரியவங்க போராட்டத்துக்கு வரவேணாம்னு மைல்டா பதிலடி கொடுத்திருந்தார். இந்தமுறை கடுமையக விமர்சித்துள்ளார். பெரியாரிஸ்டுகள், இடதுசாரிகள், மதச்சார்பற்றோர்னு பலரும் ரஜினி பேசியதை விமர்சித்துள்ளார்கள். ரஜினி தரப்போ, துக்ளக் விழாவில் அ.தி. மு.க.வின் பத்திரிகையையும் சேர்த்து குறிப்பிட்டிருந்தால் இவ்வளவு சீரியசாகப் பார்க்கப்பட்டிருக்காது, மிஸ்ஸாகிவிட்டது என்று கூறிவருகின்றனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்