Skip to main content

எடப்பாடி பழனிசாமியின் கேள்வி; அதிமுக ஆட்சியில் நடந்ததை சுட்டிக் காட்டி பதில் அளித்த அமைச்சர்

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Question by Edappadi Palaniswami; The minister replied by pointing out what happened in the AIADMK regime

 

விவசாயிகளுக்காக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததை மேற்கோள் காட்டி பதில் அளித்துள்ளார். 

 

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது குறித்த விவகாரத்தில் ஏதேனும் செய்திகள் வந்தால் அதை என்னிடமோ அல்லது மின்சாரத்துறை உயரதிகாரிகளிடமோ உறுதி செய்து கொண்டு அதை செய்தியாக வெளியிட வேண்டும் என ஊடகத்துறையினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மிக சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளன. 67 ஆயிரம் பேர் மட்டுமே இன்னும் இணைக்கவில்லை. ஒரு குடியிருப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரு இணைப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருவெறும்பூரில் அதிகாரி ஒருவர் சுற்றறிக்கை அனுப்பி அது ஒரு செய்தியாக ஆக்கப்பட்டது.

 

உடனடியாக மின்சார வாரியத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனால் இதுபோன்ற செய்திகள் ஏதேனும் வந்தால் ஊடகத்துறையினர் என்னிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டு அதை செய்தியாக வெளியிடவும். ஏனெனில், செய்தியாக அவ்விவகாரம் வந்தால் பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி பரபரப்பாகிறது. இதுபோன்ற சுற்றறிக்கை யாருக்கும் அனுப்பப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி அவராக சுற்றறிக்கை அனுப்பியதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை ஏற்கனவே பெறப்பட்ட மின் இணைப்புகளில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாது. எத்தனை மின் இணைப்புகளை பெற்று இருந்தாலும் அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் இணைப்புப் பணிகள் துவங்கிய பொழுது நாங்கள் என்ன தகவல்களை சொன்னோமோ அதே நடைமுறையைத்தான் மின்சார வாரியம் பின்பற்றுகிறது.

 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரம் மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 2021 பிப்ரவரி 26 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு அரசாணையை அதிமுக வெளியிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அந்த அரசாணையில் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும் மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரமும் மற்ற பகுதிகளுக்கு 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது அந்த அரசாணையில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.