Skip to main content

மரணம்தான் சிறைவாசிகளுக்கு விடுதலையா? கடும் நோய் மற்றும் வயோதிகர்களிடம் கூட கருணை காட்ட கூடாதா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

 

 

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் 18.03.2018 அன்று தேனியில் நடைபெற்றது.  பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இப்பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 

தீர்மானம் 1 : ஜார்கண்ட் மாநில அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது விதித்துள்ள தடையை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள், கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி. 
 

ஜார்கண்ட் மாநில பா.ஜ.க அரசு தேசிய அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை  அந்த மாநிலத்தில் அநீதியான முறையில்   தடை செய்து  ஜனநாயக படுகொலை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. பா.ஜ.க அரசின் இந்த அநீதியான செயலை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் 16.03.2018 அன்று சென்னையில் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி,  சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் உடன் நாங்கள் இருக்கின்றோம் என்று உரக்கச் சொன்னதுடன் ஜார்கண்ட் அரசு தடையுத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும்  அழுத்தமாக முன்வைத்தனர். 
 

நீதிக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் அலைகடலென திரண்டு வந்து  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் குறிப்பாக பெருந்திரளாக கலந்து கொண்ட பெண்கள் மற்றும் அனைத்து கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக இப்பொதுக்குழு மனமார்ந்த நன்றிகளை  உரித்தாக்கிக் கொள்கின்றது.
 

தீர்மானம் 2 : அவர்கள் நம்மை நோக்கி வரும் முன் (Before They Come For Us) - தேசிய பிரச்சாரம் 
 

மார்ச் 20 முதல் ஏப்ரல் 15 வரை “அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்” என்ற தலைப்பில் தேசம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற தேசிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், முஹல்லா கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 

தீர்மானம் 3 : தமிழகத்தில் தொடரும் பா.ஜ.க-வின் மதவாத வன்முறை அரசியலுக்கு எதிராக அனைத்து  ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். 
 

அனைத்து சமூக மக்களும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புடன் வாழ்ந்து வரும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க பாசிச சங்பரிவார சக்திகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க வின் தேசிய செயலாளர் என்று அறியப்படும் ஒருவர் கூறுவதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய தலைவர்களின் பொறுப்பற்ற, கீழ்த்தரமான பேச்சுகளால் உத்வேகமடையும் சங்பரிவார அமைப்பின் உறுப்பினர்கள் விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதையும் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தளங்கள் தாக்கப்படுவதையும் இதன் பின்னணியில் தான் நாம்பார்க்க வேண்டியுள்ளது.
 

இத்தைகைய அசாதாரண சூழ்நிலைகள் தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் விஷ்வ இந்து பரிஷத்தின் பின்புலத்துடன் நடைபெறும் ராமராஜ்ய ரதயாத்திரை மார்ச் 20 அன்று தமிழகத்தை அடையவுள்ளது. அனைத்து துறைகளிலும் சந்தித்து வரும் தோல்விகளை மறைப்பதற்காக மத்திய பா.ஜ.க அரசின் முழு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த ரதயாத்திரை மக்களை பிளவுப்படுத்தி வகுப்புவாத வெறியை ஊட்டுவதற்கு நடத்தப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களின் முந்தைய ரதயாத்திரைகள் நாட்டில் ஏற்படுத்திய ரணங்கள் இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் ஒரு யாத்திரையின்   பாதிப்பை இத்தேசம் தாங்கிக் கொள்ளாது. வன்முறை சிந்தனைகளை மக்களிடையே பரப்பும் இந்த ரதயாத்திரையை தமிழக அரசு தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது  என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. 
 

மேலும் அவதூறு மற்றும் வெறுப்புக் கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் பாசிச சங்பரிவார தலைவர்கள் மற்றும் கிறஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் அதன் குண்டர்கள் மீது தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுத்து சங்பரிவார பாசிச சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க-வின் மதவாத வன்முறை அரசியலுக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து  ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. 
 

 

jail 350.jpg

 


தீர்மானம் 4 : ஆயுள் சிறைவாசிகளை காலதாமதமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும். 


பத்தாண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகளை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பை சேர்ந்த மக்களும் பல்லாண்டுகளாக கோரிக்கைகளை முன்வைத்த போதும் மாநில அரசாங்கம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.  எம்.ஜி.ஆர் நூற்றாண்டை ஒட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவர் என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி சிறைவாசிகள் விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் பின்னர் அறிவித்தது.
 

அரசாங்கத்திடமிருந்து வெறும் அறிவிப்புகள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் மார்ச் 10 அன்று ஏறத்தாழ இருபதாண்டுகளை சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசி ரிஸ்வான் கோவை மத்திய சிறையிலேயே மரணித்துள்ளார். தஸ்தகீர், சபூர் ரஹ்மான், ஒஜீர், ரிஸ்வான் என சிறையிலேயே பிரியும் உயிர்கள், மரணம்தான் சிறைவாசிகளுக்கு விடுதலை அளிக்குமோ என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றது. கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயோதிகர்களிடம் கூட அரசாங்கம் ஏன் கருணை காட்ட மறுக்கின்றது என்ற கேள்வியும் இயல்பாக எழுகின்றது.
 

எனவே சிறைவாசிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் வெறும் அறிவிப்புகள் மூலம் திருப்திப்படுத்த முனையாமல், முஸ்லிம் சிறைவாசிகள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் உள்ளிட்ட பத்தாண்டுகளை கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் பாரபட்சமின்றியும் காலதாமதமின்றியும் தமிழக அரசாங்கம் உடனே விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. 
 

 

nutrino 200.jpgதீர்மானம் 5 : மக்கள், வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
 

அழிவுத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதை தனது கொள்கையாகக் கொண்டு செயல்படும் மத்திய பா.ஜ.க அரசாங்கம் நியூட்ரினோ திட்டத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் மதிப்பீட்டு குழு இத்திட்டத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கியிருப்பது தமிழக அரசு மற்றும் மக்களின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு மதிப்பளிக்காததை காட்டுகின்றது.
 

தனது அதிகாரத்தின் கீழ் வராத இத்திட்டத்திற்கு நிபுணர் குழு வழங்கியிருக்கும் இந்த சிறப்பு அந்தஸ்தின் மூலம் மேற்கு போடி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும். 2011-ல் வழங்கப்பட்ட அனுமதியை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ள நிலையில் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
 

மக்கள், வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்தை மாநில அரசாங்கம் தொடர்ந்து எதிர்த்து வந்த போதும் மத்திய அரசாங்கம் இத்திட்டத்தை கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்கும் மத்திய அரசின் இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதனை எதிர்க்க முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.            


 

Cauvery management board 200.jpg

                    

தீர்மானம் 6 : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும்.
 

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பிப்ரவரி 16, 2018 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலக்கெடுவை நிர்ணயம் செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் கூறியிருப்பது மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துகின்றது.
 

192 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற 2007-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் உத்தரவிட்டது. தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பில் இது 177.25  டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவே தமிழர்களுக்கான ஆறுதலாக உள்ளது. தமிழக மக்கள் நலனை விட கர்நாடகா தேர்தல் நலனே தனக்கு முக்கியம் என்ற ரீதியில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக தமிழக ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசாங்கம் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. ,;
 

 

சார்ந்த செய்திகள்