Skip to main content

இப்படி செய்யாதீங்க... அமைச்சரால் இப்போது நிம்மதி... அமித்ஷாவின் அறிவிப்பு... கடுமையாக எச்சரித்த அன்புமணி! 

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை அதிமுக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதை அப்படியே சட்டப்பேரவையில் பதிவு செய்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. மக்களிடம் ஒரு அச்சத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அமைச்சர்கள் சிறைக்கு செல்வீர்கள் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக திமுகவினர் பேசி வருவதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.   

இந்த நிலையில்,  இதுகுறித்து  பாமகவின் ராஜ்யசபா எம்.பி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்குவது குறித்து மத்திய அரசிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில், தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், என்பிஆர் கணக்கெடுப்பின்போது சந்தேகத்துக்கிடமானோர் என்று எவரும் குறிப்பிடப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இவை இரண்டும் சரியான நடவடிக்கைகள் ஆகும்.

 

admk



தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் வழக்கம் கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கியது. அதன்பின் 2015-ம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு மேம்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் தேசிய மக்கள்தொகை பதிவேடு மீண்டும் தயாரிக்கப்படவிருக்கிறது. ஆனால், 2010-ம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பின்போது மக்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளை விட இப்போது கூடுதலாக 6 கேள்விகள் எழுப்பப்படவுள்ளன. பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை குறித்த 6 கேள்விகள் மக்களிடையே அச்சத்தை விதைத்துள்ளன. இந்தக் கேள்விகளை நீக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். இதை வலியுறுத்தி அண்மையில் நடந்த பாமகவின் இரு பொதுக்குழு கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

pmk



சர்ச்சைக்குரிய 6 கேள்விகளையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள போதிலும், அதற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் சர்ச்சைக்குரிய கேள்விகளுடன் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான பணிகளைத் தொடங்கினால், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் அச்சம் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு தற்காலிக நிம்மதியை அளிக்கக்கூடும்.


அடுத்தகட்டமாக, மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து என்பிஆர் கணக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய கேள்விகளை முழுமையாக நீக்கவும், அதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் அச்சத்தை முழுமையாகப் போக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

 

 

dmk

மற்றொருபுறம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லிம் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த விளக்கத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கான சர்ச்சைக்குரிய கேள்விகள் பற்றி விளக்கமளித்த அவர், என்பிஆர் கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகளில், அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; தெரிந்த தகவல்களை மட்டும் அளித்தால் போதுமானது; எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை; தகவல்களைத் தராதவர்கள் சந்தேகத்துக்கிடமானவர்கள் என்று குறிப்பிட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.


தேசிய மக்கள்தொகை பதிவெடு தயாரிப்பு குறித்து எந்தவிதமான அச்சமும் தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்படும்; அவற்றுக்கு விடை அளிக்காவிட்டால் சந்தேகத்துக்கு இடமானவர்களாக அறிவிக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்படும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பரப்புரை செய்து வந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்திற்குப் பிறகு பொய்யான பரப்புரைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இனியும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்பிஆர் பற்றி தேவையற்ற, பொய்யான தகவல்களைக் கூறி மக்களை அச்சுறுத்தும் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.