Skip to main content

கட்சி அலுவலகத்தின் முன் தொண்டர்கள் போராட்டம்; நெருக்கடியில் பாஜக தலைமை!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Party workers protest in front of BJP office; Leadership in crisis!

 

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்‌ஷப்பாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ விருபாக்‌ஷப்பா, அரசின் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்க ரூ. 81 லட்சத்தை விருபாக்‌ஷப்பாவின் மகன் பிரஷாந்த் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்காக முதற்கட்டமாக ரூ. 40 லட்சத்தை லஞ்சமாகப் பெற்ற போது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 6 கோடி பணமும் சிக்கியது. இதைத் தொடர்ந்து விருபாக்‌ஷப்பா மற்றும் அவரது மகன் பிரஷாந்தை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கைது செய்து லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

இந்நிலையில் சன்னகிரி தொகுதி பாஜக தொண்டர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் பெங்களூருவில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிக்கியுள்ள விருபாக்‌ஷப்பாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் தலைமை இது குறித்து தங்களது முடிவை அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

போராட்டத்தால் அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தொண்டர்களே அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவது கர்நாடக பாஜக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்